பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தமிழ் திரை இசை பாடல்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர். ஆனால், இவருடைய சொந்த வாழ்க்கையில் பெரும் சோகமே உள்ளது. இவர் இரண்டு திருமணங்கள் செய்து, இரண்டும் விவாகரத்தில் போய் முடிந்துள்ளது.
இந்நிலையில், முஸ்லீம் மதத்துக்கு மாறிவிட்டதாக சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதற்கு, அவரது அப்பா இளையராஜா, மற்றும் அவருடைய சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட உறவினர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இவருடைய டுவிட்டர் பக்கத்திலும் அதற்கு ஆதரவு வந்ததைவிட எதிர்ப்பு கருத்துக்களை அதிகமாக வந்துள்ளன.
இதனால் தன்னுடைய அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் இருந்து இப்போதைக்கு விடை கொடுத்துள்ளார். தன்னுடைய கடைசி செய்தியாக அந்த பக்கத்தில், இதுவரை எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா நெடுநாட்களாக டுவிட்டர் பக்கத்தை பயன்படுத்தி வருகிறார். தான் இசையமைக்கும் படங்கள், கலந்துகொள்ளும் படவிழாக்கள் போன்றவற்றை உடனுக்குடன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யும் பழக்கம் உடையவர்.
இந்நிலையில் மதம் மாறியதாக வெளியிட்ட செய்திக்கு ரசிகர்கள் அளித்த கருத்துக்கள் அவரது மனதை புண்படையச் செய்துள்ளது. இந்த பிரச்சினை சற்று தணிந்த பிறகு மீண்டும் டுவிட்டர் பக்கத்துக்கு திரும்புவார் என்று தெரிகிறது.





