ஒவ்வொரு அணியும் குறிப்பிட்டளவு டெஸ்ட் போட்டிகள் விளையாட வேண்டும்: ஐ.சி.சி

479

டெஸ்ட் அந்தஸ்துள்ள ஒவ்வொரு நாடும் குறிப்பிட்டளவு எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளை ஒவ்வொரு வருடமும் விளையாட வேண்டும் என சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் செயற்குழு பரிந்துரைத்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளை எதிர்காலத்தில் பாதுகாக்கும் முகமாக இந்தப் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் செயற்குழுவிற்கு லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன் சர்ச்சைக்குரிய விதத்தில் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக இடம்பெற்ற இந்தச் செயற்குழுக் கூட்டத்தில், இந்தப் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

4 வருடம் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஸ் காலகட்டத்தில், ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு அணியும் ஆகக்குறைந்தது 4 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்ற வேண்டுமெனவும், அதன்படி அந்த 16 வருடக் காலகட்டத்தில் ஒவ்வொரு அணியும் ஆகக்குறைந்தது 16 போட்டிகளில் பங்குபற்ற வேண்டிய நிலை காணப்படுகிறது.

அண்மைக்காலமாக இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் தொடர்களை இரத்துச் செய்து, அவற்றிற்குப் பதிலாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளைக் கொண்ட தொடர்களை ஏற்பாடு செய்து வரும் நிலையில் இந்தப் பிரேரிப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

செப்டெம்பர் 2009ம் ஆண்டு முதல் செப்டெம்பர் 2013 வரையிலான காலகட்டத்தில் இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் என்பதோடு குறைந்த டெஸ்ட் போட்டிகளாக வங்கதேச அணி 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும்.

ஜிம்பாப்வே அணி 2011ம் ஆண்டிலிருந்தே மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற ஆரம்பித்துள்ள நிலையில், அவ்வணி 8 போட்டிகளில் பங்குபற்றியிருக்கும்.