
பாங் பாங் படத்தில் வரும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிப்பேன் என்று ரித்திக் ரோஷன் அடம்பிடித்து நடிக்கவிருக்கிறார்.
நடிகர் ரித்திக் ரோஷன் கத்ரீனா கைஃப் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் பாங் பாங். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் ரித்திக்கின் தலையில் அடிபட்டது. இதையடுத்து அவருக்கு மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன் பிறகு சில நாட்கள் ஓய்வெடுத்த அவர் மீண்டும் பட வேலைகளில் இறங்கிவிட்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு ரித்திக் மீண்டும் பாங் பாங் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பு சிம்லாவில் நடந்து வருகிறது.
ரித்திக்கின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஆக்ஷன் காட்சிகளை டூப் வைத்து எடுத்துள்ளனர். இந்நிலையில் சிம்லா சென்ற ரித்திக் அதை பார்த்து அதிருப்தி அடைந்துள்ளார்.
ஆக்ஷன் காட்சிகளில் டூப் வேண்டாம் நானே நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ரித்திக். இருப்பினும் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு டூப் போடும் ஆட்கள் தயாராக வைக்கப்பட்டிருப்பார்களாம்.
ஹொலிவுட் படமான ஸ்பைடர் மேன் 2 படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த ஆன்டி ஆர்ம்ஸ்ட்ராங் தான் பாங் பாங் படத்தில் ஆக்ஷன் காட்சிகளை கவனித்து வருகிறார். ரித்திக் ரோஷன் டான்ஸ் ஆடுவதில் மன்னன். அவருக்கு ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடுவது சுத்தமாக பிடிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.





