இலங்கையில் 75 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர் எண்ணிக்கை : நேற்று 801 பேர் அடையாளம்!!

680

கோவிட்-19 வைரஸ்..

இலங்கையில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்றும் 801 பேருக்குக் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை75 ஆயிரத்து 654 ஆக அதிகரித்துள்ளது. கடந்த கடந்த நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையில் நாட்டில் மூவாயிரம் வரையிலான தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டிருந்ததுடன் 13 பேரே தொற்றால் உயிரிழந்திருந்தனர்.

இந்தநிலையில், மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை மற்றும் பேலியாகொட மீன் சந்தைக் கொத்தணிகளைத் தொடர்ந்து நாளாந்தம் தொற்றுக்கு உள்ளான 500 இற்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு வருவதுடன், நாளாந்தம் மரணங்களும் பதிவாகி வருகின்றன.

இதேவேளை, கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 865 பேர் இன்று குணமடைந்துள்ளனர் எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கோவிட்-19 தொற்றிலிருந்து இதுவரை 68 ஆயிரத்து 696 பேர் குணமடைந்துள்ளதுடன், 6 ஆயிரத்து 568 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.