இந்திய அணிக்கு கடும் கட்டுப்பாடு

468

சாம்பியன்ஸ் கிண்ணத்தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் வரும் ஜூன் 6ல் துவங்குகிறது. அன்று, இந்திய அணி முதல் போட்டியில், தென் ஆப்ரிக்காவை சந்திக்கவுள்ளது. இதற்காக தோனி தலைமையிலான இந்திய வீரர்கள் லண்டனுக்கு சென்றுள்ளனர்.

அணியின் மனேஜராக, கடந்த 2011 உலக கோப்பை வென்ற போது இருந்த ரஞ்சிப் பிஸ்வால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, ஒன்றரை ஆண்டுகள் இந்த பதவியில் இருந்த இவர், எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், உள்ளதை உள்ளபடி அப்படியே அறிக்கையாக கொடுத்துவிடுவாராம்.

கடந்த 2010ல் வெஸ்ட் இண்டீஸ் பொது விடுதியில் நடந்த சண்டை குறித்தும், வீரர்களின் நடத்தை குறித்தும், பிஸ்வால் கடுமையான அறிக்கை கொடுத்தார். இதன் பின் தான் இந்திய வீரர்களுக்கு கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டன.

‘பார்ட்டிக்கு’ தடை

இதனால், இங்கிலாந்தில் இந்திய அணி வீரர்களுக்கு மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இரவு பார்ட்டிகளுக்கு தடை, நள்ளிரவில் வெளியே செல்ல அனுமதி கிடையாது.

முன் அனுமதி இன்றி தங்கியிருக்கும் ஹோட்டலை விட்டு வீரர்கள் வெளியே செல்லக் கூடாது. யாரிடம் இருந்தும் பரிசுப் பொருட்களை பெறக்கூடாது. வீரர்களின் மொபைல் எண்கள் முழுவதும் கண்காணிக்கப்படும்.

ஏற்கனவே உள்ளது:

இந்த விதிகள் ஏற்கனவே உள்ளது தான் என்றாலும், 2011ல் உலக கோப்பை வென்ற பின், யாரும் இதை ஒழுங்காக பின்பற்றவில்லை. இம்முறை, சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணிக்கு எந்த பிரச்னையும் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு, பிஸ்வாலை கேட்டுக் கொண்டுள்ளனர்.

தவிர, இத்தொடருக்குப் பின் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணிக்கும் இவர் மானேஜராக இருக்க சம்மதித்துள்ளார். ஆனால், அணியுடன் இணைந்து செல்லாமல் தனியாகத் தான் போகப் போகிறாராம்.