வவுனியாவில் ஒருவர் உட்பட வடக்கில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று!!

1325

கொரோனா..

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று நேற்று (28.02.2021) உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தவர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 259 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் எவருக்கும் தொற்று இல்லை.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 7 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்களில் 5 பேர் மன்னாரைச் சேர்ந்தவர்களாவர்.

மன்னார் நகரில் சிகையலங்கரிப்பு நிலையம் நடத்துபவருக்கு கடந்த வாரம் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,அவருடன் தொடர்புடையோர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் தொற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இவர் கொழும்பில் ஆய்வுகூட தொழில் நுட்பவியலாளராகக் கடமையாற்றும் நிலையில் நவாலியில் வசிக்கும் அவரது மனைவிக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் நேற்று தொற்று கண்டறியபட்டது. இவர் ஏற்கனவே தொற்றாளராகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீளவும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றார்.