வவுனியாவில் குளங்களை பாதுகாக்க ஒன்றிணைவோம் : சத்தியாக்கிர போராட்டத்திற்கு அழைப்பு!!

1731

சத்தியாக்கிர போராட்டத்திற்கு அழைப்பு..

வவுனியாவில் நிலத்தடி நீருக்குள் விவசாயத்துக்கும் மூலமான குளங்களை பாதுகாக்க எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறும் சத்தியாக்கிர போராட்டத்தில் இன மத பேதமின்றி கலந்துகொள்ளுமாறு வவுனியா குளத்தை பாதுகாக்கும் செயலணி அழைப்பு விடுத்துள்ளது.

இன்று குறித்த செயலணியால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்டமானது தனிச் சிறப்பம்சமாக நூற்றுக்கணக்கான குளங்களைத் தன்னகத்தே கொண்டமைந்த ஒரு பிரதேசமாகும். இங்கு குடிநீர்த்தேவைக்கான நிலத்தடி நீருக்கும் விவசாய நீர்ப்பாசனத்திற்கும் கால்நடை வளர்ப்பிற்கும் குளங்களே ஆதாரமாக உள்ளன.

இந்த நிலையில் வவுனியாவிலுள்ள பல குளங்களும் விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு எங்கள் கண்முன்னேயே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

பெயரில் மாத்திரமே பல குளங்கள் இருக்கின்ற நிலையில் வவுனியா எனப்பெயர்வரக் காரணமான வவுனியன் விளாங்குளம் (அ) வவுனியாக் குளம் பலவழிகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் செய்யப்படுவது பாரிய ஆபத்தாக உருவெடுத்துள்ளது.

வவுனியாக் குளம் மண்கொட்டி அழிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்குடன் 20க்கும் மேற்பட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிணைவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘வவுனியாக் குளத்திற்கான மக்கள் செயலணி’ தோற்றம் பெற்றிருந்தது.

குளத்தின் 2000 சதுர மீட்டர் நீரேந்து பகுதி மண்கொட்டி நிரவப்பட்டு ‘சுற்றுலா மையம்’ என்ற பெயரிலான ஒரு வியாபார ஸ்தலமாக மாற்றப்படுவது தொடர்பில் பொது விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு சுவரொட்டி இயக்கத்தையும் துண்டுப்பிரசுர இயக்கத்தையும் நடாத்தியிருந்தோம்.

தற்போது சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா மையம் வியாபார நோக்கில் தொடர்ந்து விஸ்தரிக்கப்படுமாயின் குளத்தின் நீரேந்து பகுதி மென்மேலும் குறைவடைந்து செல்லும் அபாயமுள்ளதையும், சுற்றுலா மையத்தின் குத்தகைதாரர் நகரசபையுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீறிக் கட்டடங்களை அமைத்துள்ளதையும் சுட்டிக்காட்டியே வந்திருந்தோம்.

இதனால் குளத்தில் போடப்பட்ட மண் முற்றாக அகற்றப்பட்டு குளத்தின் நீரேந்து பகுதி பழைய நிலைக்குக் கொண்டுவரப்படவேண்டுமென்பதையும் நீர்ப்பரப்பிற்குப் பாதிப்பின்றிய முறையில் மிதக்கக்கூடிய பொறிமுறைகளால் பூங்காவை அமைக்கலாம் என்றும் எமது கோரிக்கைகளில் வெளிப்படுத்தியிருந்தோம்.

நாங்கள் எதிர்வு கூறியது போன்றே துரதிஷ்டவசமாக மக்கள் எதிர்ப்பை மீறியும் பொழுதுபோக்கு என்ற போர்வையில் குள ஆக்கிரமிப்பு விஸ்தரிக்கப்பட்டுக்கொண்டே சென்றது.

நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் நகரசபையின் எதிர்ப்பையும் மீறி மற்றோர் 2000 சதுரமீட்டரிலும் அதிகமான நீரேந்து பகுதி மண்ணிட்டு நிரப்பப்பட்டு சிற்றுண்டிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதுடன் அதை உடைக்குமாறு நகரசபையால் அனுப்பப்பட்ட உத்தரவும் தொடர்ந்து மீறப்பட்டே வந்துள்ளது.

எனவே இதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு சுற்றுலாமையம் என்ற பெயரில் குளத்தில் கொட்டப்பட்ட மண் முற்றாக அகற்றப்பட்டு நீரேந்து பகுதி பழையநிலைக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்பது எமது உடனடிக்கோரிக்கையாக உள்ளது.

எழுத்து மூலமும் நேரிலும் இக் கோரிக்கைகள் அரச அதிகாரிகளிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் பலமுறை வழங்கப்பட்டும் சரியான நடவடிக்கைகள் இன்மையால் பொதுமக்கள் போராட்டம் ஒன்றிற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

இது தொடர்பாக 21.03.2021 அன்று பல பொது அமைப்புக்கள், இளைஞர்கள் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சமய நிறுவனங்கள், இலக்கிய அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றோருடனும்,

குறித்த குளத்திற்குக் கீழான கமக்காரர் அமைப்பின் பிரதிநிதிகளுடனும் ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் முன்னிலையில் சந்தித்துக் கலந்துரையாடியதன் அடிப்படையில் 26.03.2021 காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பண்டார வன்னியன் சிலை முன்றலில் அமைதியான முறையில் சத்தியாக்கிரகம் ஒன்றினைச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளோம்.

நிலத்தடி நீரையும் விவசாயத்திற்கான நீர்ப்பாசனத்தையும் பாதுகாத்து எமது அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பதன் முதற்படியாக இன்று அனைவரும் வவுனியாக் குளத்தினைப் பாதுகாக்க ஒன்றிணைவோம்.

அனைத்துப் பொது அமைப்புக்களும் மக்களும் இன மத கட்சி பேதமின்றிக் கலந்துகொண்டு எமது நீர் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வோம் எனவும் அவ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.