திருமதி உலக அழகி கரேலின் செயல் ஏற்புடையதல்ல : ரோசி சேனாநாயக்க!!

9259

ரோசி சேனாநாயக்க..

திருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் செயற்பாடுகள் ஏற்புடையதல்ல என முன்னாள் திருமதி உலக அழகி ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இலங்கையில் நடைபெற்ற திருமதி இலங்கை அழகுராணி போட்டியில் வெற்றியீட்டிய புஸ்பிகாவிடமிருந்து கிரீடத்தை பறித்து, இரண்டாம் இடம் வென்றவருக்கு கரோலின் கிரீடம் அணிவித்திருந்தார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் பின்னணியில் கரோலினது செயற்பாடுகளை முன்னாள் திருமதி உலக அழகி ரோசி சோனாநாயக்க கண்டித்துள்ளார்.

பெண்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், அவ்வாறு முடியாவிட்டால் எங்களது வாய்களை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஏதேனும் பிரச்சினைகள் இருந்திருந்தால் அது மேடைக்கு வெளியே வைத்து தீர்க்கப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் அனைத்து பெண்களின் சார்பிலும் புஸ்பிகாவிடம் மன்னிப்பு கோருவதாக ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாயைள தினம் புஸ்பிகாவிற்கு அதிகாரபூர்வமாக கிரீடம் வழங்கப்படும் எனவும், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடாத்தப்பட உள்ளதாகவும் போட்டி ஏற்பாட்டுக்குழு பணிப்பாளர் தினேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மேடையில் வைத்து ஒரு சில நிமிடங்களில் அகற்றப்பட்ட கிரீடம் மீண்டும் புஸ்பிகா டி சில்வாவிடம் ஒப்படைப்பு!!

திருமதி இலங்கை என்ற பட்டத்திற்கான இறுதிப் போட்டி நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற போது அழகு ராணியாக தெரிவான புஸ்பிகா டி சில்வா கிரீடம் பறிக்கப்பட்டது.

எனினும், தற்பொழுது அந்த கிரீடம் அவரிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருமதி இலங்கை நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

திருமணமாகி விவாகரத்தான ஓர் பெண்ணுக்கு இந்த பட்டத்தை வழங்க முடியாது என கரோலின் ஜூரி, புஸ்பிகாவிற்கு வழங்கப்பட்ட கீரிடத்தை மீளப் பெற்று இரண்டாம் இடம் பெற்றவருக்கு வழங்கியிருந்தார்.

எனினும், புஸ்பிகா விவகாரத்தானவர் என்பதனை நிரூபிப்பதற்கு எவ்வித எழுத்து மூல ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், இதனால் அவருக்கே இந்த பட்டத்தை மீள வழங்க தீர்மானித்ததாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்விற்கு பாரிய அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவின் பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் புஸ்பிகா டி சில்வா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாம் விவகாரத்து பெற்றுக்கொள்ளவில்லை எனவும், மேடையில் வைத்து அணிவிக்கப்பட்ட கிரீடம் அகற்றப்பட்டதனால் தமக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக புஸ்பிகா தெரிவித்துள்ளார். இந்த அவமானத்திற்கான நட்டஈடு கோருவது குறித்து தாம் சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரீடம் அணிவிக்கப்பட்டு பின்னர் அதனை அகற்றிய சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வரும் நிலையில் புஸ்பிகாவிற்கு மீளவும் கிரீடத்தை வழங்கியதாக ஏற்பாட்டுக் குழு பணிப்பாளர் தினேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.