வவுனியாவில் கொரோனா தொடர்பான அரச சுற்றறிக்கையை மீறி நடைபெற்ற அரச நிகழ்வு!!

2353

புதிய மணிபுரம் கிராமத்தில்..

கொரோனா தொடர்பான அரசாங்கத்தின் சுற்றறிக்கைகளை மீறி வவுனியாவில் அரச அதிகாரிகளால் மக்களைத் திரட்டி நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார பிரிவினராலும், அரசாங்கத்தாலும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த விசேட அறிக்கைகள், சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன் வட மாகாண ஆளுனரும் வடக்கு மாகாணத்தில் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

குறித்த சுற்றறிக்கைகளுக்கு அமைவாக பாடசாலைகள், பல்கலைக்கழங்கள், மேலதிக வகுப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அரச தனியார் நிறுவனங்கள் 25 வீத உத்தியோகத்தர்கள், ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரச நிகழ்வுகள், விழாக்கள், ஒன்றுகூடல்கள், திருமண வைபவங்கள், மக்கள் கலந்து கொள்ளும் விசேட நிகழ்வுகள், வீடுகளில் இடம்பெறும் விருந்துபசாரங்கள் என்பன மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில் அரச அதிகாரிகள் சிலர் இதனை கண்டு கொள்ளாத நிலை காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்தவகையில் வவுனியா, புதிய மணிபுரம் கிராமத்தில் உள்ள பொது நோக்கு மண்டபத்தில் ‘மாதிரி கிராம அங்குரார்ப்பன’ நிகழ்வு இன்று (04.05) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இதில் 75 பேர் வரையிலானவர்கள் கலந்து கொண்டதுடன், சிலர் முககவசங்களை அணியாமலும், சிலர் முக கவசங்களை சீராக அணியாமலும் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர், மாவட்ட செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம அலுவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் முன்மாதிரியாக இருக்க வேண்டிய நிலையில் அரச சுற்றறிக்கைகளை மீறி நடைபெறும் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்தி, மாவட்டத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.