வவுனியாவில் அத்தியாவசியப் பொருள் விநியோகம் தொடர்பில் மாவட்ட சுகாதாரப் பிரிவினரின் கோரிக்கை!!

3129

வவுனியா மாவட்டத்தில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த பயணத்தடைக் காலப்பகுதிளில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை சரியாக பயன்படுத்தி கோவிட் பரவலை தடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு வர்த்தகர்களிடம் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

நாட்டில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில், வவுனியா மாவட்டமும் கோவிட் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 17 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. சிறிய கிராமமான சகாயமாதாபுரத்தில் கடந்த சில நாட்களுக்குள் 54 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, வவுனியா மாவட்டததிலும் கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனைப் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதுடன், அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை மீறாது ஒத்துழைப்பு அனைவரும் வழங்க வேண்டும்.

அத்துடன், பயணத்தடை காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிப் பொருட்களை வழங்கும் பொருட்டு பிரதேச செயலகம் ஊடாக பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அனுமதியானது மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அவர்களது வீடுகளுக்கு வழங்கவே வழங்கப்பட்டுள்ளது.

அதனை வர்த்தகர்கள் சரியாக வேண்டும். பல வர்த்தகர்கள் அவ்வாறதன பாஸ் அனுமதியைப் பெற்று தமது வர்த்தக நிலையங்களை திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

வாகனங்களில் விற்பனை செய்வோர் நிலையாக ஓர் இடத்தில் நின்று வியாபாரம் செய்கின்றனர். இதனால் வர்த்தக நிலையங்களிலும், குறித்த வாகனங்களின் முன்னும் மக்கள் குவிகின்றனர். இது சுகாதார பாதுகாப்பு முறைகளை கேள்விக்குட்படுத்துவதுடன், கோவிட் பரம்பலுக்கும் வழிவகுக்கின்றது.

எனவே வர்த்தக நிலையங்களுக்கு மக்களை அழைக்காது பாஸ் அனுமதியை முறையாக நடைமுறைப்படுத்தி வீடுகளுக்கு பொருட்களை வழங்குவதன் மூலம் கோவிட் பரம்பலை கட்டுப்படுத்த முடியும்.

சுகாதாரப் பிரிவினர் ஆகிய நாம் இரவு பகல் பாராது கோவிட் பரம்பலை கட்டுப்படுத்துவதற்காக எமது குடும்பங்களை கூட கவனிக்காது அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வேலை செய்கின்றோம்.

எனவே எமது பணிக்கு ஒத்துழைப்பு வழங்கி கோவிட் பரம்பலை தடுக்க முன்வாருங்கள். நாம் மட்டும் செயற்பட்டு கோவிட்டை கட்டுப்படுத்த முடியாது. மாவட்டத்தின் உண்மை நிலமையை உணர்ந்து அனைவரும் ஒத்துழைத்து செயறபடுவதன் மூலமே கோவிட் பரம்பலைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.