இலங்கை அணியின் கிரிக்கட் வீரர்கள் மூவருக்கு ஓராண்டு கால போட்டித் தடை!!

1750


கிரிக்கட் வீரர்கள்..



ஒழுக்க விதிகளை மீறிய இலங்கை அணியின் கிரிக்கட் வீரர்களுக்கு ஓராண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது. குசால் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.



அண்மையில் இங்கிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் மூன்று வீரர்கள் கோவிட் உயிர்குமிழி விதிகளை மீறி வீதியில் உலவியதாக குற்றம் சுமத்தப்பட்டது.




இது தொடர்பிலான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த வீரர்கள் உடனடியாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.


இந்த வீரர்களிடம் ஒழுக்காற்று குழுவினால் விசாரணை நடாத்தப்பட்டு வீரர்கள் இருவருக்கு இரண்டு ஆண்டுகால தடையும் ஒருவருக்கு ஒன்றரை ஆண்டு கால தடையும் விதிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

எனினும், ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் மூன்று வீரர்களுக்கும் ஓராண்டு கால தடையை விதிப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா பத்து மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


அனைத்து விதமான கிரிக்கட்டிலிருந்தும் ஓராண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியான அனைத்து விதமான கிரிக்கட்டிலிருந்து ஓராண்டு காலமும், உள்ளுர் போட்டிகளிலிருந்து ஆறு மாத காலமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனைக் காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் மேலும் ஓராண்டு காலம் சர்வதேச போட்டித் தடை விதிக்கப்படுவதாகவும் அது ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

மேலும், இந்த வீரர்கள் கட்டாயமாக மருத்துவ ஆலோசனைகளுக்கு உட்படுத்தபடுவார்கள் எனவும் அது தொடர்பான பரிந்துரைகளை ஸ்ரீலங்கா கிரிக்கட் வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.