வவுனியாவில் நோயாளிக்கு காலாவதியான மருந்தை வழங்கிய தனியார் வைத்தியசாலை மீது நடவடிக்கை!!

5010


பிரபல தனியார் வைத்தியசாலை..



வவுனியாவில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு காலாவதியான மருந்து வழங்கப்பட்டமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் சோதனை நடவடிக்கை ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.



வவுனியாவை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு சுகவீனம் ஏற்ப்பட்ட நிலையில் நேற்று (12.10) வவுனியா, குடியிருப்பு, குளவீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சையினை பெற்றுக் கொண்டதுடன், மருந்தினையும் பெற்றுச் சென்றிருந்தார்.




அந்த மருந்தினை நோயாளி இரவு பயன்படுத்திய நிலையில் அவருக்கு சுகயீனம் ஏற்பட்டதுடன், உடலில் சில மாற்றங்களையும் அவதானித்துள்ளார். இதனையடுத்து குறித்த மருந்துகளை சோதித்து பார்த்த போது ஒரு மாதத்திற்கு முன்பாகவே அவை காலாவதியாகியுள்ளாகியமை தெரியவந்துள்ளது.


பின்னர் இன்று (13.10) காலை குறித்த வைத்தியசாலைக்கு சென்ற அவர் அங்கு கடமையில் இருந்தவர்களிடம் விடயத்தினை தெரியப்படுத்தியதுடன், தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது அங்கிருந்த பணியாளர் காலாவதியான மருந்தை மூன்று மாதத்திற்கு பயன்படுத்தலாம் என நோயாளிக்கு தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.


சம்பவம் தொடர்பாக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து, குறித்த தனியார் வைத்தியசாலைக்கு வருகை தந்த பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் சோதனை நடத்தியதுடன்,

காலாவதியான சில மருந்துகளையும் மீட்டிருந்தனர். இது தொடர்பில் குறித்த தனியார் வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்திற்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்ட தனியார் வைத்தியசாலையினர் இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும் பாதிக்கப்பட்டவரிடம் தெரிவித்திருந்தனர்.