உலகெங்கும் மின்னல் வேகத்தில் பரவும் ஒமிக்ரோன் : இலங்கை மக்களுக்கு விசேட அறிவித்தல்!!

1503

இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள சுகாதார செயற்பாடுகளே பிரதானமானவை என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இது நிறுவனங்கள், அலுவலகங்கள், அங்காடிகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களின் கட்டாய கடமையாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒமிக்ரோன் தொற்றின் பரவலை அடுத்து அண்டை நாடான இந்தியா உட்பட்ட நாடுகளில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது.

எனவே இலங்கையிலும் தொற்று அதிகரிக்காது என்று கூறமுடியாது. எனினும் சுகாதார சேவையினருக்கு கட்டுப்படுத்தும் அளவில் தொற்று எண்ணிக்கையை வைத்துக்கொள்ளும் போது கடும் சுகாதார நடவடிக்கைகளுக்கு செல்லத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்தியா உட்பட்ட ஏனைய நாடுகளில் இருந்து வருவோரிடம் உரிய பீசீஆர் ஆவணங்கள் கோரப்படுகின்றன என்றும் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில் இலங்கையில் ஐயாயிரம் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களை நிர்வகிக்கும் திறன் சுகாதாரத்துறையினருக்கு உள்ளது.

எனினும் அந்த நிலைமைக்கு செல்லாமலிருக்க சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் டென்னிஸ் வீரர் நொவெக் ஜோக்கோவிக் தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை போன்று ஏன் இலங்கையிலும் கொரோனாக் கட்டுப்பாட்டு விடயத்தில்,

கடுமையான தீர்மானங்களை எடுக்கமுடியாதுள்ளது என்று எமது செய்திச்சேவை கேட்ட கேள்விக்கு பதிலளித்த, ஹேமந்த ஹேரம், இலங்கையின் ஸ்திரமற்ற அரசியல் கொள்கைகள் அதற்கு இடம் தராது என்று குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் இதற்கு உதாரணங்களாகும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையின் சில பொது இடங்களில் முகக்கவங்களை அணியாமல் பலர் செயற்படுவதாக தெரிவித்த அவர்,

பொது இடங்களுக்கு செல்வோர் தடுப்பூசி அட்டைகளை கொண்டு செல்லவேண்டும் என்ற நடைமுறை வர்த்தமானி பிரகடனத்தின் பின்னரே உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்