ஸ்மார்ட் போனால் சீரழித்த இளம்பெண்ணின் வாழ்கை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

1508


திருச்சி..



திருச்சி மாவட்டம் குமுளூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி மீனா இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தை நல்லபடியாக காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் மலேசியாவில் வேலைக்கு செய்து அவர் அனுப்பும் பணத்தை வைத்து குழந்தைகளை நன்கு படிக்க வைத்து குடும்பத்தை நல்லபடியாக நடத்தி வந்தார் மீனா.



இந்த நிலையில் மீனா வாழ்க்கையில் செல்போன் மூலம் குட்டிச்சாத்தான் வீட்டிற்குள் புகுந்தது. கணவருடன் வீடியோ கால் பேசுவதற்காக வாங்கப்பட்ட அந்த ஸ்மார்ட் போன் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடன் மீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.




கணவர் வெளி நாட்டில் இருந்த சமயத்தில் பலவிஷயங்களையும் , ஆண் நண்பர் சுரேஷிடம் மனம் விட்டு பேசி உள்ளார் மீனா. இந்த நிலையில் தானும் வெளி நாட்டில் வேலை பார்க்க விரும்புவதாகவும் அங்கு செல்வதற்கு பணம் கொடுத்து உதவும் படியும் கேட்டுள்ளார்.


மீனா தனது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் தனது ஆண் நண்பர் சுரேஷுக்கு 2 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து உதவி உள்ளார். உள்ளூரில் இருக்கும் வரை சற்று அடக்கத்துடன் இருந்த சுரேஷ் வெளி நாடு சென்ற பின்னர் மீனாவிடம் பேசுவதில் எல்லை மீறியதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து மீனா தான் கொடுத்த 2 லட்சம் ரூபாயை திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் பணம் வேண்டுமானால் வீடியோ காலில் வா… என்று வற்புறுத்தி உள்ளான். அவனை நம்பி வீடியோ காலில் பேசிய போது , பணம் வேண்டுமானால் ஆடைகளை அகற்று என்று மிரட்டி உள்ளான்.


இதற்கு சம்மதிக்காமல் மீனா தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், மீனாவை தொடர்பு கொண்டு, நாம் இருவருக்கும் காதல் இருப்பதாகவும், நீ தான் என்னை மலேசியாவுக்கு பணம் செலவழித்து அனுப்பி வைத்தாய் என்றும் இங்கு வேலை பார்க்கும் உனது கணவரிடம் சொல்லி உன் வாழ்க்கையை சீரழித்து விடுவேன், உனது பணமும் கிடைக்காது என்று பிளாக் மெயில் செய்துள்ளான்.

இதனால் அதிர்ந்து போன மீனா, சுரேஷிடம் தூண்டிலில் சிக்கிய மீனாக துடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவனது கட்டாயத்தின் பேரில் வீடியோ காலில் அவன் விருப்பத்திற்கு ஏற்றார் போல தோன்றும் துர்பாக்கிய நிலைக்கும் மீனா தள்ளப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் வீட்டில் சென்று பணம் வாங்கிக் கொள்ள கூறி உள்ளான் சுரேஷ் , வீட்டில் உள்ளவர்கள் சுரேஷ் உடன் மீனாவை இணைத்து பேசி அவமானப்படுத்தி துரத்தியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீர் விட்டு கதறி வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார் மீனா.

ஆண் நண்பரிடம் கொடுத்த பணத்தையும் ஏமாந்து, ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி விரக்தி அடைந்த மீனா கழுத்தில் தூக்கிட்ட நிலையில் மரணவாக்குமூல வீடியோ ஒன்றை பதிவு செய்து வைத்து விட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

மனைவியின் நடத்தை குறித்து ஊரார் நாலுவிதமாக பேசியதால் அதிருப்தி அடைந்த கணவர் பாலசுப்பிரமணியம் , மனைவியின் சாவுக்கு வராததால் உறவினர்கள் மீனாவின் சடலத்தை பிணகூறாய்வுக்கு பின் தகனம் செய்து விட்டனர்.

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின் ஊருக்கு திரும்பிய பாலசுப்ரமணியம் தனது மனைவி பயன்படுத்திய செல்போனை சுவிட்ஜ் ஆன் செய்து பார்த்த போது அதில் இருந்த வீடியோக்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கடந்த 22ந்தேதி லால்குடி டி.எஸ்பியிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் செய்தார்.

இதையடுத்து மலேசியாவில் இருக்கும் சுரேஷ் மற்றும் அவரது தாய் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் மீது 8 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சுரேஷுக்கு எதிராக விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதே நேரத்தில் ஆண் நண்பருடன் பழகுவதிலும், பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பெண்கள் உஷாராக இல்லையென்றால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.