வவுனியாவில் பெற்றோல் விநியோகத்திற்கு எரிபொருள் அட்டை நடைமுறை!!

2367


எரிபொருள் அட்டை நடைமுறை..



வவுனியாவில் பெற்றோலை விநியோகத்தை சீராக ஒழுங்கமைக்கும் வகையில் ஒவவொரு வாகனங்களுக்கும் எரிபொருள் விநியோக அட்டைகளை வழங்கி நிகழ்நிலை மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் இராணுவ அதிகாரிகள், பொலிசார், திணைக்கள தலைவர்கள், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஆகியோருடன் நேற்று (19.06) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.




வவுனியா மாவட்டத்தில் பெற்றோல் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் முகமாக பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து விசேட நடைமுறை ஒன்று பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் அட்டைகள் வழங்கப்பட்டு அதனை நிகழ்நிலையில் (ஒன்லைனின்) பதிவு செய்து வாரத்திற்கு ஒரு தடவை எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாகன இலக்கங்களுடன் நிகழ்நிலையில் பாதுகாப்பு தரப்பினர் பதிவு செய்யவுள்ளதுடன், குறிப்பிட்ட சிலர் அதிகளவு பெற்றோலை பல எரிபொருள் நிரப்பு நிலைங்களில் பெற்று விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


குறித்த நடைமுறை இன்று (20.06) திங்கள் கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், நேற்றைய தினம் (19.06) பெற்றோல் சிட்டைகள் வழங்கப்பட்டவர்களுக்கு நிகழ்நிலையில் பதிவு செய்து எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், இந்தவாரம் முதல் பெற்றோல் அட்டைகள் வவுனியாவில் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.