இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்!!

1494

கர்நாடகாவில்..

கர்நாடகாவில் இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் இரயில் மோதி உயிரிழந்ததால், அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பிரீத்தி புட்டசாமி. 22 வயதாகும் இவர், அந்த பகுதி கல்லூரி ஒன்றில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தார்.

இவர் அந்த பகுதி இரயில் தண்டவாளத்தை கடந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை வழக்கம்போல் அந்த பகுதியில் உள்ள இரயில் தண்டவாளத்தை கிடைக்க முயற்சித்துள்ளார். அப்போது அவர் கால் தவறி தண்டவாளத்தில் விழுந்தார்.

அப்போது மைசூருவில் இருந்து ஹாசன் நோக்கி வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் இரயில் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரீத்தி உடல் சிதறி பரிதாபமாக பலியானார். பின்னர் சம்பவம் அறிந்து வந்த இரயில்வே காவல்துறையினர், சிதறி கிடந்த மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே ஏற்கனவே அந்த பகுதி இரயில் தண்டவாளத்தின் குறுக்கே மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததால், அந்த பகுதி மக்கள் மற்றும் பிரீத்தி படிக்கும் கல்லூரி மாணவர்கள் அங்கு வந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் சாலையின் குறுக்கே டயர்களை போட்டு தீ கொளுத்தினர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், அந்த பகுதி மக்களிடம் விரைவில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.