வவுனியா புளியங்குளத்தில் கொள்கலனில் எரிபொருள் விநியோகம் : எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் உட்பட இருவர் கைது!!

1626


இருவர் கைது..



அரசாங்க அறிவுறுத்தலை மீறி கொள்கலனில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றதாக வவுனியா புளியங்குளம் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கட்டுப்படுத்தும் முகமாக அரசாங்கத்தினால் நாடு பூராகவும் எரிபொருள் அட்டை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.



இது தொடர்பில் எரிசக்தி அமைச்சால் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.



இந்நிலையில், வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (05.08) பெற்றோல் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.


இதன்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய எரிபொருள் அட்டை (கியூஆர்) நடைமுறை முறையாக பின்பற்றப்படாது எரிபொருள் விநியோகம் இடம்பெற்றதுடன்,

சில வாகனங்களுக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக எரிபொருள் வழங்கப்பட்டது. அத்துடன் கொள்கலனிலும் எரிபொருள் வழங்கப்பட்டது.


இது தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து கொள்கலன் ஒன்றில் எரிபொருள் எடுத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டதுடன்,

குறித்த நபருக்கு எரிபொருள் விநியோகம் செய்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரும் புளியங்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.