வவுனியா தெற்கு வலய மாணவர்களின் கள ஆய்வு செயற்பாடு நாளை ஆரம்பம்..!

383

chemistry

வவுனியா தெற்கு வலய கள கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் வவுனியா வடக்கு, தெற்கு வலய உயர் தர உயிரியல் பிரிவு மாணவர்களினால் பாடத்திட்டத்தினை அடிப்படையாக கொண்ட கள ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக கள கற்கை நிலையத்தின் முகாமையாளர் ஏ. ஜெய்கீசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிரியல் பிரிவு மாணவர்களின் கள ஆய்வினை விருத்தி செய்யும் நோக்குடன் முதற் கட்டமாக வவுனியா தெற்கு வலயத்தின் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் 35 மாணவிகளும் வவுனியா வடக்கு வலயத்தின் புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் 12 மாணவர்களும் இக் கள ஆய்வில் ஈடுபடவுள்ளனர்.

இவர்கள் நாளை வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள கடற்கரை சாகியத்தையும் அதனை அண்டிய பிரதேசத்தினையும் ஆய்விற்கு உட்படுத்தவுள்ளனர் என தெரிவித்தார்.

இதேவேளை, ஓமந்தை பிள்ளை நேய பாடசாலை செயற்பாடுகள் சிறந்த கற்றல் கற்பித்தல் சூழல் மற்றும்; அறிவூட்டல் செய்றபாடுகள் தொடர்பான கல்வி சுற்றுலா ஒன்றினை வவுனியா தெற்கு வலய கல்வி உத்தியோகத்தர்களும் பாடசாலை அதிபர்களும் மேற்கொள்ளவுள்ளனர்.

வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் தீருமதி செ. அன்ரன் சோமராஜா தலைமையில் எதிர்வரும் திங்கள் செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் திருகோணமலை, சம்மாந்துறை ஆகிய வலய பாடசாலைகளுக்கு செல்லும் இவர்கள் அப் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் மற்றும் அறிவூட்டல் செயற்பாடுகளை பார்வையிடவுள்ளனர்.

இக்கல்வி சுற்றுலாவில் கலந்துகொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் எதிர்வரும் சனிக்கழமை காலை 10.30 மணிக்கு முன்பாக வலயக் கல்வி அலுவலகத்தில் தங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் கேட்டுள்ளார்.