கனடாவில் இந்திய வம்சாவளிச் சிறுமி விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு : தந்தை கூறிய நெகிழவைக்கும் வார்த்தைகள்!!

343

கனடாவில்..

கனடாவில் விபத்தொன்றில் இந்திய வம்சாவளிச் சிறுமி ஒருத்தி கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள். விர்ஜினியாவில் வாழ்ந்துவரும் சுக்விந்தர் சிங் குடும்பம், 2020ஆம் ஆண்டு, கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் தங்கள் பெற்றோரைக் காண்பதற்காக வந்திருந்த நிலையில், அவர்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

நிஹாலின் மரணம் மறக்க முடியாத பயங்கரமான நினைவுகளாக அந்தக் குடும்பத்தினர் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. இந்த வயதுக்குள்ளேயே, தூதரக அதிகாரியான தன் தந்தையுடன் இந்தியா உட்பட்ட பல நாடுகளை சுற்றி வந்த குட்டி தேவதையான தங்கள் மகளை இழந்த விடயம் அவர்களை எவ்வளவு பாதித்துள்ளது என்பதை லண்டன் நீதிமன்றத்தில் நேற்று கண்ணீர் வழிய பதிவு செய்தார்கள் நிஹால் குடும்பத்தினர்.

அப்போது, குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி, நிஹாலின் உயிரைப் பறித்த அலிஷியா தனது தரப்பு கருத்தைப் பதிவு செய்ய நேரம் கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய அலிஷியா, நான் செய்த மிகப்பெரிய தவறின் தாக்கம் என்னை தினமும், ஒவ்வொரு கணமும் பாதிக்கிறது, நிஹாலால் எனது பிரார்த்தனைகளைக் கேட்கமுடியுமா? எனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை என்றார்.

 

தன் மகள் பலியாக காரணமாக இருந்த பெண்ணிடம் சிறுமியின் தந்தை கூறிய வார்த்தைகள் அலிஷியாவுக்கு பதிலளித்த நிஹாலின் தந்தையான சுக்விந்தர், நேரடியாக அவரைப் பார்த்து, அலிஷியா, உங்களை நான் முழுமையாக மன்னிக்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறேன்.

நிஹாலும் அதைத்தான் விரும்பியிருப்பாள் என நான் நம்புகிறேன், அவள் எப்போதுமே யார் மீதும் கசப்போ கோபமோ வைத்ததில்லை என்றார். அலிஷியா தனது வாழ்நாள் முழுவதும் தனது தோளில் எவ்வளவு பெரிய சுமையை சுமக்கவேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்று கூறிய சுக்விந்தர், தான் அவரிடம் ஒரே ஒரு விடயம் மட்டும் கேட்டுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

அது, நிஹாலின் வாழ்க்கையிலிருந்து எதையாவது நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான். காரணம், இந்த வயதுக்குள் அவள் சென்ற இடமெல்லாம் ஆச்சரியத்துக்குரிய விடயங்களை அவள் செய்துவந்தாள் என்றார் அவர். அலிஷியா வழக்கு, இம்மாதம் (நவம்பர்) 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று அவரது தீர்ப்பு வழங்கும் திகதி அறிவிக்கப்படும்.