ப்ளீஸ் அழாதீங்க… கதறி அழுத ஈரான் வீரருக்கு ஆறுதல் கூறிய அமெரிக்க அணி வீரர்கள்!!

313

கத்தாரில்..

நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத ஈரான் வீரர் அழுததைப் பார்த்து ஓடி வந்து அமெரிக்க வீரர்கள் ஆறுதல் கூறினர்.

4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.

நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள அல் துமாமா மைதானத்தில் ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – ஈரான் அணிகள் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் கோல் அடிப்பதற்கு இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த சூழலில் ஆட்டத்தின் முதல் பாதியின் 38வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் புலிசிக் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். ஆட்டத்தில் இரண்டாவது பாதியில் போட்டியை சமன் செய்ய ஈரான் வீரர்களின் கடும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், இறுதிவரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

இதனையடுத்து, இப்போட்டியின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா அணி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து அமெரிக்கா புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்ததுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

நேற்றிரவு தோல்வியடைந்த கால்பந்து அணியின் வீரர் சயீத் எஸதுல்லா மைதானத்தில் கதறி அழ தொடங்கினார். அப்போது, அமெரிக்க கால்பந்து அணியின் வீரர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.

தற்போது இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நெகிழ்ச்சி அடைந்து அமெரிக்க அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.