காதலனோடு சேர்த்து வைக்கிறோம் என பெண்ணை ஏமாற்றி கும்பல் செய்த மோசமான செயல்!!

344


சென்னையில்..



சென்னை பெண்ணிடம் முன்னாள் காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி 40 சவரன் தங்க நகைகளை ஏமாற்றி பறித்த பஞ்சாப் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



காதலனோ காதலியோ விட்டு சென்றால் அவர்களை மீண்டும் சேர்த்து வைப்பதற்கு HOW TO GET YOUR EX BACK என்ற செயலி உள்ளது; இதே போல் பெயர் கொண்ட ‘ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்’ (HOW TO BRING YOUR EX BACK) போலி இணையதளமும் உள்ளது.




இதன்மூலம் நூதன முறையில் சிலர் ஏமாற்று வேலை செய்து வருகின்றனர். அதில் தற்போது சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலில் தோல்வி அடைந்துள்ளார். எனவே HOW TO BRING YOUR EX BACK என்ற ஒரு இணையதளம் மூலம் தனது காதலனுடன் திரும்ப சேர வேண்டும் என்று எண்ணியுள்ளார்.


எனவே அந்த செயலியில் தன்னை குறித்தும், தனது காதலன் குறித்தும் விவரங்களை பதிவேற்றினார். இதையடுத்து அவர்களை இணையதளம் வாயிலாக மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டுள்ளார்.

அப்போது அந்த பெண்ணிடம் பேசிய அவர், அந்த பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைப்பதாகவும், ஆனால் அதற்கு கொஞ்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதனால் சற்று யோசித்த அந்த இளம்பெண், தனது காதலனுடன் சேர்ந்தால் போதும் என்று எண்ணி, அவர்களுக்கு பணம் கொடுக்க சம்மதித்துள்ளார்.


அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மர்ம நபர்களை சென்னை விமான நிலையம் வரவழைத்தது தன்னிடம் இருந்த 40 சவரன் தங்க நகைகளை கொடுத்துள்ளார்.

அதனை பெற்று கொண்ட அவர்கள் குறிப்பிட்ட தேதியில் அவரையும், அவரது காதலனையும் சேர்த்து வைப்பதாக வாக்குறுதி கொடுத்து அங்கிருந்து சென்றுள்ளனர்.

பின்னர் குறிப்பிட்ட நாளில் சேர்த்து வைப்பதாக கூறிய அவர்கள், அந்த பெண்ணை சிறிது நாட்களுக்கு பிறகு தொடர்பு கொண்டு மேலும் 5 லட்சம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே பணம் தரவில்லை என்றால், உன்னை பற்றி இணையதளத்தில் தப்பு தப்பாக செய்திகள் பரப்பிவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சென்னை விமான நிலையத்தின் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி புகார் எழுதிக் கொடுத்தார். இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அந்த இணையப்பக்கத்தை ஆய்வு செய்து அதன் முகவரியை கண்டறிந்தனர். அது பஞ்சாப் மாநிலத்தை காட்டியது.

எனவே அவர்களை கையும் களவுமாக பிடிக்க காவல்துறையினர் ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி பாதிக்கப்பட்ட பெண், மர்ம நபர்களை தொடர்புகொண்டு பணத்தை தர ஒப்புக்கொண்டு சென்னை விமான நிலையம் வரவழைத்துள்ளார்.

இதனை நம்பிய அவர்கள், உடனே அங்கு வந்துள்ளனர். அப்போது அங்கு சக பயணிகள் போல் மாறுவேடத்தில் இருந்த காவல் அதிகாரிகள் அந்த மர்ம நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அனில் குமார் (27), ககன்தீப் பார்கவ் (33) ஆகிய இருவர் என தெரியவந்தது. தொடர்ந்து அவர்களின் மேற்கொண்ட விசாரணையில், ஏற்கனவே இதைப்போல் போலியான இணையதளம் வாயிலாக பல இளம்பெண்களையும் இளைஞர்களையும் ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.

தொடர்ந்து அதோடு அவர்களிடமிருந்து பணம், ரூபாய் 8.5 லட்சம், 54 கிராம் தங்க செயின்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.