தூக்கம் கெடுவதால் கணித, விஞ்ஞான திறன் குறையும்

755


பள்ளிப் பிள்ளைகளின் கற்கும் திறனில், அவர்களது தூக்கமின்மை அல்லது தூக்கம் கெட்டுப் போதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது.

சர்வதேச கல்விப் பரீட்சைகளை நடத்தும் ஆய்வாளர்கள் இதனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.



மிகவும் முன்னேறிய நாடுகளில், குறிப்பாக கணினி மற்றும் தொலைக்காட்சிகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு இந்த தூக்கம் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், அத்தகைய நாடுகளில் உள்ள பள்ளிப் பிள்ளைகளின் கணித, விஞ்ஞான மற்றும் வாசிப்பு திறன் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

பொஸ்டன் கல்லூரியால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அமெரிக்காவிலேயே அதிகமான குழந்தைகள் தூக்கம் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.



அங்கு 9 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளில் 73 வீதத்தினருக்கு ஒழுங்கான தூக்கம் கிடையாது என்றும், 13 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளில் 80 வீதத்தினருக்கு தூக்கம் சரியாக இல்லை என்றும் கூறப்படுகிறது.



உலக சராசரியைவிட இது மிகவும் அதிகமாகும்.


இதேபோன்று நியூசிலாந்து, சவுதி அரேபியா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்தப் பிரச்சினை அதிகமாக உள்ளது.

நல்ல தூக்கம் இருப்பதால், கணிதம், விஞ்ஞானத்தில் அதிக பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களை கொண்ட நாடுகளாக அஜர்பைஜான், கசகஸ்தான், செக் குடியரசு, ஜப்பான் மற்றும் மோல்ட்டா ஆகிய நாடுகள் திகழுகின்றன.


ஆசிய மாணவர்கள் இந்த கணித, விஞ்ஞான மற்றும் வாசிப்பு திறனில் முன்னணியில் திகழ்கின்றனர்.

சரியான நித்திரை இல்லாத பிள்ளைகள் ஆசிரியர்களின் உத்தரவுகளை கடைப்பிடிப்பதிலும் சோர்வு காண்பிப்பதாகக் கூறப்படுகின்றது.

தூக்கம் குறைவான நிலைமையில் மூளை புதிய விசயங்களை உள்வாங்க தடுமாறுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

கணினியில் விழித்திருத்தல், நண்பர்களுக்கு அதிகமாக மெசேஜ்களை அனுப்புவர்கள் ஆகியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.