வவுனியாவில் கடந்த 5 நாட்களில் 6 மரணங்கள் பதிவு : நால்வர் கைது!!

3376

வவுனியாவில்..

வவுனியா மாவட்ட மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 6 அகாலமரணங்கள் பதிவாகியுள்ளதுடன் நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா குட்செட் வீதியிலுள்ள உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த 07.03.2023 அன்று காலை ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்களாக மீட்கப்பட்டதுடன்,

குறித்த சம்பவத்தில் வீட்டின் குடும்பஸ்தர் சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42) வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன் அவரது மனைவியான கெ.வரதராயினி (வயது36),

இரு பிள்ளைகளான கெ.மைத்ரா (வயது9) , கெ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கிய படியும் சடலமாக மீட்கப்பட்டதுடன் இவர்களின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் அவர்களின் உடற்கூற்று பரிசோதனையின் முடிவில் உடலில் நஞ்சருந்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை. மரணித்தவர்களினது இரத்தம், சிறுநீர் மாதிரிகளும் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையினர் தெரிவித்தனர்.

வவுனியா பூவரசங்குளம் மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 09.03.2023 கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் நித்தியநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சக்திவேல் யசோதரன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன்,

குறித்த இளைஞரின் சடலத்தில் காயங்கள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் இது மது போதையில் நிகழ்ந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு சந்தேக நபர்களை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் வவுனியாவில் பிரபல வைத்தியரின் வீட்டின் அவரது மகன் செந்தில்காந்தன் லக்சிகன் (வயது 26) நேற்று 10.03.2023 மாலை நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இவ்வாறு தொடர்ச்சியாக நிகழ்ந்த மரணங்களின் அடிப்படையில் மாவட்டத்தில் கடந்த 5நாட்களில் 6 அகாலமரணங்கள் பதிவாகியுள்ளதுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.