வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பெயர்த்து எறியப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர்!!

550

வெடுக்குநாறி..

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் தொல்பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் நிர்வாகத்தினர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர்.

எனினும் கடந்தவருடம் குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாகத்தினர்கள் வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டதுடன்,

குறித்த சம்பத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை ஆதாரங்களுடன் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை ஆலயத்திற்கு சென்ற கிராமமக்கள் மற்றும் பூசகர் ஆலய விக்கிரகங்கள் திருடப்பட்டு அழித்தெறியப்பட்டமையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்பாக ஆலயத்தின் பிரதான விக்கிரகமான ஆதிலிங்கம் அகழ்ந்து எடுக்கப்பட்டு அருகில் இருந்த புதருக்குள் வீசப்பட்டிருந்தது. அத்துடன் பிள்ளையார், அம்மன், வைரவர் விக்கிரங்களும் பெயர்த்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.