வவுனியாவில் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!!

1474


ஆர்ப்பாட்டப் பேரணி..



வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.



ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று (30.03) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்ட பின் ஆரம்பமாகிய பேரணி மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து பசார் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.




வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உட்பட ஏனைய விக்கிரகங்களும் கடந்தவாரம் உடைத்தழிக்கப்பட்டிருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியிருந்தது.


குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இந்த விசமச் செயலை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குறித்த பேரணி இடம்பெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘வெடுக்குநாறிமலை மீதான தாக்குதல் கௌதம புத்தரின் ஆன்மீகத் தோல்வி, ஈழத்தமிழனை வேரறுக்க நினைக்காதே, வெடுக்குநாறி எங்களின் இடம், மத சுதந்திரத்தை தடுக்காதே, தொல்பொருள் திணைக்களமே வெளியேறு’ போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைளையும் ஏந்தியிருந்தனர்.


ஆர்ப்பாட்ட பேரணியாக சென்ற மக்கள் வைத்தியசாலை சுற்றுவட்ட பகுதியில் அமைந்திருந்த தொல்பொருள் திணைக்கள அலுவலக வளாகத்திற்குள் சென்று வாயிலை மறித்து தொல்பொருள் திணைக்களமே வெளியேறு என கோசமிட்டனர். சுமார் 15 நிமிடங்கள் வரை குறித்த வாயிலை முற்றுகையிட்ட மக்கள் பின்னர் அங்கிருந்து வெளியேறி மாவட்ட செயலகம் சென்றிருந்தனர்.

மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களிடமும், ஜனாதிபதிக்கான மகஜர் ஜனாதிபதியின் வடக்கிற்கான இணைப்பாளரும், மேலதிக செயலாளருமான ஈ.இளங்கோவன் அவர்களிடமும் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களும் மகஜர் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இது குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் அரச அதிபர் ஆகியோர் இணைந்து வாக்குறுதி வழங்கியதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றனர்.

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறீதரன், செ.கஜேந்திரன், தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன்,

சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், பொதுஅமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமயப் பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைகழக மாணவர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், காணாமல்போன உறவுகளின் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.