கண் தான் ‘மவுஸ்’.. பார்வைதான் ‘கர்சர்’.. தமிழக பள்ளி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!!

726

தஞ்சாவூரில்..

டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தினால், இளைய தலைமுறை இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்லும் என்பதற்கு உதாரணமாய் தமிழக பள்ளி மாணவர் ஒருவர் சாதித்திருக்கிறார்.‌

தஞ்சாவூர் அருகே உள்ள படுகோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவன் கிஷோர். 16 வயதே உடைய கிஷோர், தற்போது கண்டுபிடித்திருக்கும் புதிய கணினி தொழில்நுட்பம் அவருடைய வயதுக்கும் படிப்புக்கும் அப்பாற்பட்டது என்று சொல்ல வேண்டும்.

எனினும் அறிவுக்கு வயது தடை இல்லை; வயது பெறும் நம்பர் தான் என்பதை நிரூபித்து சாதித்துக் காட்டியிருக்கிறார் கிஷோர். ஆம், மௌசின் உதவியின்றி கண்களாலேயே கணினியை இயக்கக்கூடிய தொழில்நுட்பத்தைத்தான் கிஷோர் கண்டுபிடித்திருக்கிறார்.

இதுவரை கண்களை ரெக்கக்னைஸ் செய்து கணினி அல்லது செல்போன்களில் லாகின் செய்யக்கூடிய ரெட்டினா ஸ்கேன் முறை பரவலாக இருந்தது. ஆனால், இம்முறை கிஷோர் கண்டுபிடித்திருப்பது மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிதும் உதவக்கூடிய கண்களால் கணினியை இயக்கும் தொழில்நுட்பம் தான்.

தந்தை வெளிநாட்டில் பணிபுரிய, அம்மா தையல் பணிகளை செய்ய, படிப்பில் ஆர்வமிக்க கிஷோர் இப்படி ஒரு கண்டுபிடிப்ப கண்டுபிடித்தார். இதற்கு பெரிதும் காரணமானவர்கள் கிஷோரின் மாற்றுத்திறனாளி நண்பர்கள்தான். அது பற்றி யோசிக்கும் போது கிஷோர் தன் வகுப்பு மாணவன் சிவமாரிமுத்துவுடன் இதுபற்றி தொடர்ந்து விவாதித்திருக்கிறார். அதன் பிறகுதான் இவர்கள் பைதான் கோடிங் பற்றி அறிந்திருக்கின்றனர்.

இந்த பைதான் கோடிங் பற்றி யூடியூபிலும் நிறையத்தேடி அதுபற்றி மென்மேலும் இவர்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். அதன் விளைவாக மாற்றுத்திறனாளிகள் யார் உதவியும் இன்றி தாங்களே கணினிகளை இயக்குவதற்கான ஒரு தொழில்நுட்பமாக, வெப் கேமராவை நோக்கி கண்களால் பார்க்கும்பொழுது அது அங்கிருந்து ஒரு பைதான் கோடின் மூலமாக கர்சராக மாறுகிறது. இப்போது மௌசை வைத்து கர்சரை நகர்த்துவது போல பயனரின் கண்கள் எங்கெல்லாம் பார்க்கிறதோ அங்கெல்லாம் கர்சர் நகரும்.

அதன்பிறகு கூகுள் தேடுபொறிக்குச் சென்று எதை வேண்டுமானாலும் தேடிக்கொள்ளலாம் என்கிற அளவில் தற்போது இந்த தொழில்நுட்பத்தை வடிவமைத்திருக்கின்றனர்.

தொடர்ந்து இந்த கோடிங்கில் பல மாற்றங்களை செய்து புதிய விஷயங்களையும் அப்டேட் செய்து வருகின்றனர் இந்த மாணவர்கள். இவர்களின் இந்த போற்றத்தக்க சாதனையை தஞ்சாவூர் வல்ஹல்லாவில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சியில் அண்மையில் தனது கண்டுபிடிப்பை அரங்கேற்றினார். இவர்களுக்கு சான்றிதழ்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன.