டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணியின் மிகப்பெரிய வெற்றி!!

588

டெஸ்ட் கிரிக்கெட்..

அயர்லாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 280 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியை பெற்றுள்ளது.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் தற்போது முன்னிலையில் இருக்கிறது. திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம ஆகியோரின் சதங்களும் ப்ரபாத் ஜயசூரியவின் 10 விக்கெட்டுகளுமே இலங்கையின் வெற்றியை உறுதியாக்கியுள்ளன.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 448 பின்னிலையில் இருந்தவாறு பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து சகல விக்கெட்களையும் இழந்து 168 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸால் தோல்வி அடைந்தது.

அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 6 விக்கெட்டுக்களை இழந்து 591 ஓட்டங்களைப் பெற்றதுடன் அயர்லாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

போட்டியின் 3ஆம் நாளான இன்று(18.04.2023) தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த அயர்லாந்து மொத்தமாக 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணியைச் சேர்ந்த ப்ரபாத் ஜயசூரிய 52 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் அரங்கில் தனது அதிசிறந்த இன்னிங்ஸ் பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை ஒரு கட்டத்தில் அயர்லாந்து 5 விக்கெட்களை இழந்து 40 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததால் அவ்வணி 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது.

ஆனால், ஹெரி டெக்டர் (42), கேர்ட்டிஸ் கெம்ஃபர் (30), ஜோர்ஜ் டொக்ரல் (32), அண்டி மெக்ப்றைன் (10), மார்க் அடயார் (23 ஆ.இ.) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று அயர்லாந்து 150 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

இலங்கை பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 3 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதனிடையே தனது 11ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரொமேஷ் மெண்டிஸ் 50 விக்கெட்களைப் பூர்த்தி செய்தார்.

இதுவரை அவர் 51 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். அத்துடன் தனது 6ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ப்ரபாத் ஜயசூரிய இரண்டாவது தடவையாக 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார்.

இதன்போது ப்ரபாத் ஜயசூரிய இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 43 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். அடுத்த டெஸ்ட் போட்டியில் மேலும் 7 விக்கெட்களைக் கைப்பற்றினால் அதிவேகமாக 50 விக்கெட்களைப் பூர்த்தி செய்த இலங்கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.