மூன்றே வாரங்களில் 12 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கத்தின் விலை!!

483


இலங்கையில்..



இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மிக வேகமாக உயர்ந்த அமெரிக்க டொலரின் பெறுமதி கடந்த இரு மாதங்களாக தொடர் சரிவையும் தளம்பல் நிலையையும் சந்தித்து வருகின்றது.



இந்த நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதியில் கடந்த இரு மாதங்களாக தொடர் உயர்வு பதிவாகி வருவதுடன் ஒரு சில சமயங்களில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டதட்ட கடந்த வருடம், பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் டொலரின் பெறுமதி அதிவேக வளர்ச்சியை பதிவு செய்திருந்தது, 371 ரூபாவாக அதன் விற்பனை பெறுமதியும், கொள்வனவு பெறுமதி 370 ரூபாவையும் அண்மித்திருந்தது.




இந்தநிலை, இவ்வருடம் பெப்ரவரி மாதம் வரையில் நீடித்திருந்தது. இந்த மாற்றமானது, இலங்கையில் பல்வேறு துறைகளில் சாதகமான மாற்றங்களை கொண்டுவரத் தொடங்கியது.


குறிப்பாக பொதுச் சேவை கட்டணங்கள் குறைப்பு, எரிவாயு, எரிபொருள் விலை குறைப்பு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு போன்ற பொதுமக்களுக்கு சாதகமான மாற்றங்களை சிறிதளவில் ஏற்படுத்தியிருந்தது.

அதேசமயம், பொருளாதார நெருக்கடி இலங்கையில் கோரத் தாண்டவம் ஆடி வந்த காலப்பகுதியில் தங்கத்தின் விலையும் கடுமையான உயர்வை அடைந்திருந்தது. கிட்டத்தட்ட 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலையானது 2 இலட்சம் ரூபாவை அடைந்திருந்தது.


எனினும், அதன் பின்னரான காலப்பகுதியில் ஏற்ற இறக்கங்களுடன் 1 இலட்சத்து 80 ஆயிரம் என்ற அளவில் 22 கரட் தங்கப் பவுனொன்றின் விலை பதிவாகியிருந்தது. இவ்வாறான நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியின் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதி மிக வேகமாக வலுவடைய ஆரம்பித்தது.

அதன் பின்னரான நாட்களில் தங்கத்தின் விலையும் பாரிய அளவில் சரியத் தொடங்கியது. கிட்டத்தட்ட 22 கரட் தங்கப் பவுன் ஒன்று 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையில் சரிவை சந்தித்தது.

இந்த நிலையில், தொடர்ந்து வந்த நாட்களிலும் இலங்கை ரூபாவின் பெறுமதி ஏற்ற இறக்கத்திற்கு ஏற்பட தங்கத்தின் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வந்தன. மேலும், எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறையக் கூடும் என கொழும்பு செட்டியார்த் தெரு தங்க சந்தை நிலவரம் குறிப்பிடுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில், இலங்கையில் கோவிட் தொற்று பரவலோடு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய காலப்பகுதியில் மக்கள் தங்க நகைகள் வாங்குவதில் காட்டிய ஆர்வம் இப்போது இல்லை எனலாம்.

கிட்டத்தட்ட, திருமணம் போன்ற அத்தியாவசிய மங்கள நிகழ்வுகளுக்கு மாத்திரம் தங்க நகை கொள்வனவு செய்யும் மக்கள் தொகையே தற்போது இலங்கையில் உள்ளது.

இவ்வாறான சூழலில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் உயருமிடத்து தங்க நகைகளுடைய விலைகளும் மேலும் குறையக் கூடும் என்று சொல்லப்படுகின்றது.

ஆனால், இது மக்கள் மனங்களில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தும் அல்லது தங்க நகை கொள்வனவு செய்வதில் மீண்டும் ஆர்வம் காட்டக் கூடுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதேவேளை, கடந்த 3 வாரங்களில் இலங்கையில் 22 கரட் தங்கப் பவுனொன்றின் விலையானது கிட்டத்தட்ட 12 ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளது. இதற்கு ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுப்பெற்றமையும் காரணமாகும்.

டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி நேற்றையதினம்(24.05.2023) தங்க அவுன்ஸின் விலை 602,923 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,270 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 170,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 156,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,620 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 148,900 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.