வவுனியாவில் 6 வயது மாணவியை காட்டுக்குள் கடத்திச் சென்று துஸ்பிரயோகம் செய்த இராணுவ அதிகாரி.. நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடுமையான தீர்ப்பு!!

4394

வவுனியாவில்..

ஆறு வயது பாடசாலை மாணவி மதிய நேரம் பாடசாலை விட்டு வந்த போது அவரை காட்டுக்குள் கடத்தி சென்று துஸ்பிரயோகம் செய்த நெடுங்கேணி இராணுவ முகாமின் இராணுவக் கோப்ரலுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (25.05.2023) வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14.05.2013 அன்று பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய சிறுமியை ஆட்கடத்தல் புரிந்த குற்றச்சாட்டும், சிறுமியை கடத்தி துஸ்பிரயோகம் செய்த இரண்டாவது குற்றச்சாட்டும் என சட்டமா அதிபரினால் இரு குற்றச்சாட்டுகள் நிரம்பிய குற்றப் பத்திரிகை வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

மாணவி வெள்ளை சீருடையில் இரத்தம் படிந்த நிலையில் காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டமை, விசேட சிஐடி பொலிஸ் அணி இராணுவ சிப்பாயை கைது செய்தமை, கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயை அடையாள அணி வகுப்பில் அடையாளம் காட்டியமை, நெடுங்கேணி விஜயபாகு இராணுவ முகாம் கட்டளை அதிகாரி நீதிமன்றிற்கு சாட்சியமளித்தமை,

காட்டுக்குள் இருந்து சிறுமியின் சப்பாத்துக்கள் மீட்கப்பட்டமை, இறுதியாக சட்ட வைத்திய அதிகாரியின் சட்ட வைத்திய அறிக்கை என்பவற்றை வைத்து கைது செய்யப்பட்ட நெடுங்கேணி விஜயபாகு இராணுவ முகாமின் இராணுவக் கோப்ரலை குற்றவாளி என நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன் அவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 5 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்கவும், அதனை கட்டத்தவறின் இரண்டு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படவும் மற்றும் தண்டப்பணம் பத்தாயிரம் ரூபா கட்டத்தவறின் இரு மாதம் கடூழிய சிறைத்தண்டனை எனவும் இன்று வவுனியா மேல் நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை குற்ற புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரியான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க தலைமையிலான குழுவினர் கொழும்பிலிருந்து வவுனியா சென்று குற்றவாளியான இராணுவ கோப்ரல் அதிகாரியை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.