வவுனியாவில் வெளியிடப்பட்ட கவிஞர் முல்லைத்தீபன் அவர்களின் “கடவுளிடம் சில கேள்விகள்” கவிதை நூலுக்கான ரசனைக்குறிப்பு : தலவாக்கலை றாஜ்சுகா!!

674

Kadavulமுல்லை மண்ணிலிருந்து நல்ல கவிதை நூலொன்றினை தழுவும் சந்தர்ப்பம் நம் ரசனைக்கண்களுக்கு கிடைத்துள்ளது. தீபன் என்ற கவிஞர் தன் மண்ணின்மீதுள்ள பற்று அன்பின் காரணமாக ‘முல்லைத்தீபன்’ என்ற பெயருடன் இலக்கியத்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றார்.

கல்விச்சூழலில் வளர்ந்த கவிஞர் முல்லைத்தீபன் கலைச் சுவாசத்தில் வாழ்பவராகவும் இலக்கியத்தை நேசிப்பவராகவும் காணப்படுகின்றார். இவர் ‘கடவுளிடம் சில கேள்விகள்’ எனும் தனது இரண்டாவது கவிநூலினை அண்மையில் வவுனியாசுத்தானந்தா மண்டபத்தில் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினால் வெளியிட்டுள்ளார்.

சாதாரண மனிதனாக நியாயமான கேள்விகளோடு கவிதைகளில் வெளிப்பட்டு நம்மையும் அடையாளப்படுத்துகின்றார். பிரச்சனை தோல்வி கண்ணீர் இழப்பு போன்ற வலிகளை கடக்கின்றபோது கடவுளை நொந்துகொண்டு அவரை கேள்விகேட்கின்ற இயல்பினை இயல்பாக வெளிப்படுத்துகின்றார். விடையினை வைத்துக்கொண்டு சில சந்தர்ப்பங்களில் கேள்விகளை உருவாக்குபவர்களாக நாம் இருக்கின்றோம் என்பதற்கும் இவரின் சில கவிதைகள் எடுகோலாக காணப்படுகின்றது.

சமர்ப்பணமே சற்று சிந்திக்க வைக்கிறது. கடந்து வந்த பாதையின் துன்பங்களும் துயரங்களும் இனிமேலும் தொடர வேண்டுமா..? இதனை இவ்வாறு தனது சமர்ப்பணத்தில் கூறுகிறார். தான்தோன்றீஸ்வரா.. சொந்த மண்ணிலிருந்து சிவந்தெழுதுகிறேன். இனியொரு முள்ளிவாய்க்காலை இனியெமக்குத் தந்திடாதே. ஆதலால்.. சமாதானத்திற்கிது சமர்ப்பணம். இவ்வாறு தொடர்ந்து செல்லும் இவரது கவித்தொகுப்பில்.. ‘வாழ்க்கை’ எனும் ஆரம்ப கவிதையில் வாழ்க்கை பற்றிய சரியான புரிதலை தெளிவுபடுத்துகின்றார் கவிஞர் வாழ்க்கை என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளவே வாழ்வு முடிந்துபோகின்றது இப்படியிருக்கையில் எப்படித்தான் வாழ்க்கை முழுமையாவது மனிதமனம் கற்றலை மறுதலிப்பதே இதற்கான ஒரு காரணம் எனலாம்.

எத்தனையோ வாழ்க்கை அநுபவங்களை பெற்ற அநுபவசாலிகளின் வழிகாட்டலை மதிக்க தவறிவிடுகின்றோம் இதில் சில படிமுறைகளை கடைபிடித்தாலே தவறுகளை களைந்து தகுதியானவற்றில் நாம் நுழைந்திடலாம் வாழ்வினையும் அநுபவித்திடலாம் என்பதே இக்கவிதையின் ஒரு படிப்பினை. 25 கவிதைகளடங்கிய இந்நூலில் கேள்விகளோடு புறப்பட்டுள்ள வேதனை விரக்தி என்பன வாசக உள்ளங்களோடு சமரிடுமென்பதில் ஐயமில்லை.

சொர்க்கம், நரகம் என்பது என்னவென வினவும் கவிஞர் அதனை இப்பூமியிலே இருப்பதாய் ‘சொர்க்கமும் நரகமும்’ என்ற கவிதையில் நிருவுகின்றார். ‘மனிதம்’ எனும் கவிதையில் மரித்துப்போகும் நிலையிலிருக்கும் மனிதத்தை பிரதிபலிக்கும் வரிகள் மனிதத்தை இறைவனாக பார்க்கும்விதம் பாராட்டச்செய்கின்றது. ‘இறவாத வரங்கொண்ட‌ உனக்குத்தான் இறைவன் என்றுபெயர் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒவ்வொன்றாயிராதே ஓராயிரமாயிரு உதிக்கும் நன்னுலகம் மதிக்கும் உன் புகழை விடைகாணமுடியாத மனதை அரிக்கும் பல கண்ணீர்த்துளிகளை இறைவனிடமே கேள்வியாக வீசுகின்ற மனநிலை மனிதமனங்களுக்கு இயல்பாகவே இருக்கின்றதுபோலும் ‘தனிமை, விடியலைத்தேடி, குருட்டுக்கடவுள்கள்’ போன்ற கவிதைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

ஒவ்வொரு கவிதைகளுக்கும் நூலின் தலைப்புக்கேற்றாற்போல ‘கேள்விக்குறியிலான’ படங்கள் அழகாகவும் அதிகம் சிந்திக்கவும் வைக்கின்றது. வித்தியாசமான ரசனை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் ஒருவித உற்சாகத்தையே தருகின்றது எனலாம் அதிலும் ஒவ்வொரு கேள்விக்குறியும் ஒவ்வொரு உணர்வின் வெளிப்பாடாக கவிதைகளுக்கு பொருத்தமாக இருப்பது ரசனை.

காதல் கவிதைகள் வாசிக்கும்போது ஓர் வீரத்தனமான உண்மையான ஆத்மார்த்தமான மனஉணர்வினை வெளிப்படுத்துகின்றது. போருடன் கலந்த காதலாக தெரியப்படுத்தியிருப்பதால் இன்னும் அவை வலிமைபெற்றதாக காணப்படுகின்றது. ‘நீ எங்கே’ என்ற கவிதையில் இவ்வுறுதியினை காணலாம் இடப்பெயர்வினூடே நான் இடிந்துடைந்து போனவேளை இறுமாப்பு தந்தவள் நீ… என்ற இடைவரிகளோடு தொடர்ந்து என் இன்பத்துலும் துன்பத்திலும் பங்கெடுத்துக்கொண்டவளே நான் இங்கே நீ எங்கே….. என நிறைவுபெறுகின்றது.

நட்பு எனும் விடயத்தினை கடந்துவராதவர் எவரும் இருக்கமுடியாது அந்தளவிற்கு எல்லோரது வாழ்விலும் ஒரு தாக்கத்தை சாதகமாகவோ பாதகமாகவோ ஏற்படுத்தியிருக்கும் அதிலும் ஒற்றுமையான் மனமொத்த நட்பு கிடைப்பதென்பது பெரும் வரமே. இங்கும் கவிஞர் நண்பன் ஒருவனின் இதயத்தை எழுதிக்காட்டியுள்ளார் ‘பிரிவு’ எனும் கவியில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அடையாளமிடப்ப‌ட்ட‌ அப்போதிலிருந்து எமக்குள் இடைவெளியென்பது என்றும் இருப்பதில்லையே என நட்பின் வலிமையை சொல்லி சோதரா நாமிருவரும் ஒன்றாகவே இருந்திருந்தால் பிரிவு எனும் இவ்வலி இடைவெளி தந்திராதே…. என முடித்திருக்கின்றார். நட்பின் ஆயுளுக்கு உண்மையும் ஒற்றுமையுமே அடிப்படையென்ற உண்மையினை எத்தனை அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் கவிஞர்.

இவ்வாறு ஒவ்வொரு கவிதைகளும் சமுதாய உணர்வுகளை மனித இதயங்களின் ஓசைகளை மொழிபெயர்ப்பவையாக அமைந்துள்ளது இறுதியாக ‘கடவுளிடம் சில கேள்விகள்’ கவிதை நூலுக்கு கனதியை சேர்த்துள்ளது அனைத்தும் ஆத்திரமான வரிகள். எங்கள் இயலாமைகள் தோல்விகள் கோபங்கள் துன்பங்களை இறைவனிடம் கொட்டித்தீர்த்து அநேக சந்தர்ப்பங்களில் நாம் தப்பித்துக்கொள்கின்றோம் அந்த ஆதங்கத்திலும் ஓர் அமைதி கிடைத்தேவிடுகின்றது ஆயிரமாயிரம் மலர்களெடுத்து ஆறுகாலப்பூசை செய்தோமே இரத்த ஆற்றில்நாம் வெற்றுடலாய் கிடந்தவேளை ஒரு தடவையாவது ஓடிவந்தாயா…? வலிகள் நிரம்பி வலியும் வரிகள்.

கவிஞர் முல்லைத்தீபனின் ‘கடவுளிடம் சில கேள்விகள்’ கவிதை தொகுப்பானது அடர்த்தியான வரிகள், ஆழமான புரிதல்கள், இயல்பான நடையோட்டம், ஈர்த்துவிடும் உணர்வுமிக்க கவிதைகளாய் அழகுபெறுகின்றது வாழ்வியலோடு தொடர்புபட்டு காணப்படுவதால் கற்பனைகளோ என வேறுபடுத்தி பார்க்கமுடியாதளவிற்கு யதார்த்தமாகவே படைக்கப்பட்டிருக்கின்றது.

இந்நூலில் இன்னுமொரு சிறப்பம்சம் கவிஞர் இத்தொகுப்பை சமாதானத்திற்கு சமர்ப்பித்திருப்பதே அதற்காக எழுதப்பட்ட வரிகளும் ஒருகணம் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றது. நூல் முழுவதிலும் ஓர் சோகம் வலுக்கட்டாயமாக வந்தமர்ந்திருப்பது கவலையளிக்கின்றது மீள வழி காணவேண்டும் இன்னும் கவிஞரின் வரிகள் சமூகத்தை உயிர்ப்பிக்கவேண்டும்.

யதார்த்தத்தோடு இலகுவாக கவிதைகளை கையாளும் திறமைகொண்ட கவிஞரிடமிருந்து பல நூல்களை எதிர்பார்த்தவண்ணம் அவரின் எழுத்துப்பணிகளுக்கும் முயற்சிகளுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நூல்: கடவுளிடம் சில கேள்விகள்’ கவிதை தொகுப்பு
ஆசிரியர்: முல்லைத்தீபன்
தொடர்புகளுக்கு: Email- [email protected]