யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் செய்வது எப்படி!!

4689


Jaffna kool

ஒடியல் மா – 1/2 கிலோ
மீன் – 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)
நண்டு – 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)
இறால் – 1/4 கிலோ
சின்ன சின்ன கணவாய்கள்.
நெத்தலி மீன் கருவாடு 100 கிராம்
பயிற்றங்காய் – 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)
பலாக்கொட்டைகள் – 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)
அரிசி – 50 கிராம்
செத்தல் மிளகாய் – 15 அரைத்தது
பழப்புளி – 100 கிராம்
உப்பு – சுவைக்கேற்ப



செய்முறை

முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும். செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.



இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.) அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள்,மீன்தலைகள், நண்டு, இறால்,நெத்தலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.



நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.


உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும். கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேசக் கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் போறுக்கக் கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம், கூழின் காரத் தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்.