உலகக் கிண்ண காலிறுதி யுத்தத்தில் 4 சார்க் நாடுகளின் அணிகள் : வலுப்படுமா உறவுகள்!!

536

Asian

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரலாற்றில் கால் இறுதிப் போட்டிகளில் முதல் முறையாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 4 சார்க் நாடுகள் இடம்பெற்றுள்ளன.

உலகக் கோப்பை கிரிக்கெட் 2015ம் ஆண்டு போட்டிகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் முறையாக கால் இறுதிப் போட்டிகளில் அதிக அளவில் 4 சார்க் நாடுகள் மோதுகின்றன.

இதற்கு முன்னர் 1996ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் காலிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடம்பெற்றிருந்தன. உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மேலும் சார்க் பிராந்திய மக்களை இந்த உலகக் கோப்பை ஒருங்கிணைக்கட்டும் என்றும் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். கிரிக்கெட் போட்டிகள் மூலமாக இப்பிராந்திய நாடுகளிடையே நல்லுறவை ஏற்படுத்த முடியும் என்பது மோடியின் ஆவல்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சார்க் நாடுகள் தற்போதுதான் இப்படி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பொதுவாக சர்வதேச அமைப்புகளைப் பொறுத்தவரையில் சார்க் (தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) என்பது பலவீனமான அமைப்புதான்.

அதுவும் சார்க் அமைப்பில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கருத்து வேறுபாடுகள் மேலும் பலவீனத்தையே எற்படுத்தி வந்தது. இந்நிலையில் பிரதமராக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற விழாவில் அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களையும் அழைத்து நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கும் உடனடியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார். தற்போதைய நிலையில் கிரிக்கெட் போட்டிகள்தான் சார்க் அமைப்புகளிடையே நெருக்கமான உறவை வலுப்படுத்தக் கூடிய ஒரு களமாக இருந்து வருகிறது.

இதனை மெய்ப்பிக்கும் வகையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 4 சார்க் நாடுகள் காலிறுதியில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலமாக தென்னாசியாவின் கிரிக்கெட் ரசிகர்கள் பெருமகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

ஒருவேளை கால் இறுதியிப் போட்டியில் இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ தோல்வி அடைந்தாலும் இந்த 2 நாடுகளின் ரசிகர்கள் இலங்கைப் பக்கம் சாயக்கூடும். 1992ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்திய போது பரம வைரியாக இருந்த இந்திய ரசிகர்களும் கூட அந்நாட்டை ஆதரித்ததையும் நினைவில் கொள்வோம்.

இதுதான் தென்னாசியா மக்களிடையேயான நல்லெண்ண வெளிப்பாடு. அத்துடன் சார்க் அமைப்பைச் சேர்ந்த ஒரு நாடு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்றால் நிச்சயம் இந்த பிராந்திய நாடுகள் அனைத்துமே தங்களுடைய வெற்றியாகக் கொண்டாடும். அதுவும் சார்க் நாடுகளிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கலாம்