தொடர் அரசியல் படுகொலைகள் அச்சமடைய வைக்கிறது – சீமான்!!

1070


seeman-press

தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் அரசியல் படுகொலைகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.



இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை..

பா.ஜ.க.வைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலரும், அவர்களோடு கொள்கை உறவு கொண்ட இந்து சமயக் கட்சியினர் சிலரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். இம்மாத தொடக்கத்தில் அக்கட்சியைச் சேர்ந்த வெள்ளையப்பன் என்பவர் இதேபோன்று கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.



மற்றொரு மாநில நிர்வாகியான காந்தி என்பவர் நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்தபோது பட்டப்பகலில் நடந்த கொலை முயற்சியில் இருந்து படுகாயத்துடன் தப்பியுள்ளார். தங்கள் கட்சியினர் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை பட்டியலிட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலர் தமிழிசை செளந்தரராசன் கூறியுள்ளது போல், இது திட்டமிட்ட படுகொலைகளாகவே தெரிகிறது.



ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான் இப்படிப்பட்ட படுகொலைகள் தடையின்றி தொடர்கிறது என்று கூறியுள்ளார். இந்த கொலைகள் செய்தவர்களைப் பற்றி வெளியாகும் தகவல்கள் அனைத்தும், பணத்திற்கு கொலை செய்யும் கூலிப் படையினரை ஏவிவிட்டு நடத்தப்பட்டுள்ளது நன்கு தெரிகிறது.


பாஜக பொதுச் செயலாளர் ரமேஷை அரிவாளால் வெட்டிக்கொன்ற மூன்று பேர் கும்பல் எவ்வித பதற்றமுமின்றி மிகச் சாதாரணமாக நடந்து தெரு முனைக்குச் சென்று தப்பியதாக நேரில் பார்த்தவர் கூறியுள்ளார். இதிலிருந்து கொலையாளிகள் கூலிப்படையினர்தான் என்பது புலனாகிறது. தமிழ்நாட்டில் சமீப காலமாக கூலிப்படையினரின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது.

12 ஆண்டுகள் காத்திருந்து என் கணவரைக் கொன்ற எதிரியை பழி தீர்த்தேன் என்று காவல்துறையினரிடம் ஒரு குற்றவாளி வாக்குமூலம் தந்த செய்தி நாளிதழ்களில் வந்தது. இதேபோல் பல சமூக குற்றவாளிகள் அவர்களின் தொழில் எதிரிகளால் படுகொலை செய்யும் செய்திகள் அடிக்கடி வருகின்றன.


கேரளத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி புரட்சி மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கிய டி.பி. சந்திரசேகர் படுகொலை செய்யப்பட்டது குறித்து தனது துயரத்தை வெளிப்படுத்திய மலையாள நடிகர் மோகன்லால் நான் கொல்லப்பட்டிருந்தால் எனது தாய் எப்படி துடித்திருப்பாரோ அதுபோலத்தானே சந்திரசேகரனின் தாய் துடிதுடித்திருப்பார். அந்த தாயின் மன நிலையில் இருந்து அந்தத் துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறினார்.

கொலை செய்யப்படுபவர் யாராயினும், அதற்கு கொள்கையோ, அரசியலோ காரணமாயினும் கொல்லப்பட்டவரின் தாயார் மற்றும் குடும்பத்தாருக்கு ஏற்படும் இழப்பும், துயரமும் பொதுவானதுதான். கொள்கை எதிரிகளை தீர்த்துக்கட்டுவது என்கிற நிலை, அதுவும் கூலிப்படை கொண்டு கணக்குத் தீர்ப்பது என்று போனால், அது நமது சமூக, அரசியல் வாழ்விற்கே பெரும் அச்சுறுத்தலாகிவிடும்.

எனவேதான் இப்பிரச்சனையை தீவிரமாக கையாண்டு கொலையாளிகளையும், அவர்களை பின்னின்று இயக்கிய வர்களையும் காவல் துறையினர் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். கொலை கொள்ளை செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு குற்றச்செயல்கள் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெருகியுள்ளது.

அதையும் தாண்டி இப்படிப்பட்ட அரசியல் படுகொலைகள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருவது மக்களை மேலும் அச்சமடையச் செய்துள்ளது. பா.ஜ.க. பொறுப்பாளர்கள் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டதன் பின்னணியை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், ஆடிட்டர் ரமேஷ் அவர்களை கோர மரணத்தில் பறிகொடுத்து, துயரத்தில் துடி துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சீமான்.