யாழ்ப்பாண நூலகமும் பரோபகாரி செல்லப்பாவும் : தமிழருவி த.சிவகுமாரன்!!(கட்டுரை)

1269


1

24.02.2016ல் (இன்று) பரோபகாரி செல்லப்பாவின் 120வது பிறந்தநாளை ஒட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது.



யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு நூலகம் தேவை என்ற சிந்தனை 1933ஆம் ஆண்டில் புத்தூர் மேற்கைச் சேர்ந்த ‘சக்கடத்தார்’ கே.எம்.செல்லப்பா என்ற படித்த கனவான், பரோபகாரியின் மனதில் உதித்தது.

தென் கிழக்காசியாவிலேயே குறிப்பிடத்தக்க கலைக்கோவிலாக இலங்கைக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கே பெருமை சேர்ப்பதாக ஒரு காலத்தில் விளங்கியது, யாழ்ப்பாணப் பொதுசன நூலகம். 1981 யூன் முதலாந்திகதி தீமூட்டி எரிக்கப்பட்டு பேரழிவுக்குட்பட்டது, இந்த கலைக்கோவில். சாதி, இன, மத, வேறுபாடின்றி அனைவருக்கும் இரவு பகலாக சேவையாற்றிய, சகலரது அறிவுப்பசியை நீக்கிய அந்த அறிவாலயம் ஓர் பெரும் ஆசானாகவே விளங்கி வந்தது.
அரைநூற்றாண்டுக்கு மேற்பட்ட காலமாக சொல்லொணாத் துன்ப, துயரங்களுக்கு மத்தியில் அரும்பாடுபட்டு சேர்த்து வைக்கப்பட்டிருந்த விலை மதிக்கவொண்ணா கலைப்பொக்கிஷங்கள், அறிவுப் புதையல்கள் யாவும் நொடிப்பொழுதில் எரிந்து சாம்பலாயின. இந்தப் பேரழிவு கேட்டு உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தன.



இன்று மீள அது, கட்டட வகையில் புதுப்பொலிவுபெற்று நின்று புதிய வரவுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கினாலும் அதன் ஆன்மா அன்றோடு போயிற்று. போனவை போனவையேதான், இன்றும் மீள வந்து சேராத, சேர முடியாத, சேர்க்க முடியாத பொக்கிஷங்கள் பலப்பல.



இத்தகைய யாழ்ப்பாண நூலகத்தின் வரலாறு அறியப்படவேண்டியதொன்றாகும். யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு நூலகம் தேவை என்ற சிந்தனை 1933 ஆம் ஆண்டில் புத்தூர் மேற்கைச் சேர்ந்த கே.எம்.செல்லப்பா என்ற பரோபகாரி, படித்த கனவானின் மனதில் உதித்தது.


செல்லப்பா தமது இல்லத்தில் ஒரு சிறிய நூலகத்தை ஆரம்பித்த போது, அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற அவரது விருப்பம் ஒரு எளிமையான முறையில் வெளிக்காண்பிக்கப்பட்டது.

அனுமதிக்கட்டணமின்றி இலவசமாக அந்த நூலகத்தை அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தது. அடுத்த வருடம் திரு.கே.எம்.செல்லப்பாவின் புனித கைங்கரியம் குறித்து அகமகிழ்ந்து நலன்விரும்பிகள் சிலர் பூரணமான நூலகமொன்றை அமைப்பதென முடிவுசெய்தனர்.


1934ஆம் ஆண்டு ஜுன் மாதம் 9ஆம் திகதி ஒன்று கூடிய இவர்கள் நூலகக்குழுவொன்றை அமைத்தார்கள். அப்போது மாவட்ட நீதிபதியாக இருந்த சீ.குமாரசுவாமி குழுவின் தலைவராகவும் வண.டாக்டர்.ஐஸக் தம்பையா துணைத்தலைவராகவும் கே.எம்.செல்லப்பா, சீ.பொன்னம்பலம் ஆகியோர் இணைச்செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

கே.எம்.செல்லப்பாவின் அயராத தொடர்ச்சியான முயற்சியினால் நூலகத்துக்கென 1184 ரூபா 22 சதம் அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்றது. அதுவே நூலகத்திற்கான மூலதனமாகும். இக்குழுவினர் அயராது பாடுபட்டு நூல்கள், சஞ்சிகைகள், பெறுமதி வாய்ந்த புராதன ஓலைச்சுவடிகள் ஆகியவற்றைச் சேகரித்து 1934ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி யாழ் பெரியாஸ்பத்திரிக்கு அருகில் அறை ஒன்றை வாடகைக்குப் பெற்று அதில் நூலகத்தைத் தொடர்ந்து நடத்தத் தொடங்கினார்கள்.

ஆரம்பத்தில் சுமார் 844 நூல்கள், 30 செய்திப்பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியன நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறாக புத்தூர் கே.எம்.செல்லப்பாவின் சிந்தனையில் உதித்து செயல்வடிவம் பெற்று மெல்ல வளரத்தொடங்கிய யாழ். பொது நூலகம் யாழ்ப்பாண நகரத்தவர்கள் மத்தியில் மட்டுமன்றி குடா நாட்டில் உள்ள அனைத்து மக்கள் மத்தியிலும் பிரபல்யம் பெற்றதுடன், இளைஞர்கள், முதியோர்கள் அனைவரும் நாடிவந்து பயன்பெறத் தொடங்கினர்.

பின்னர் நூலகக் குழுவினர் எடுத்த தீர்மானத்தின்படி 1936ல் மாநகரக் கட்டிடத்திற்கும், நகர மண்டபத்திற்கும் அருகிலுள்ள கட்டடமொன்றிற்கு நூலகம் மாற்றப்பட்டது. அங்கத்தவர்களுக்கு நூல்களை இரவலாகக் கொடுக்கும் சேவை இக்கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சாதாரண கட்டணமான மூன்று ரூபாவை எவரும் செலுத்தி நூலகத்தில் அங்கத்துவம் பெறக்கூடியதாக இருந்தது. மாணவர்கள் உட்பட பலரும் இதனால் பயன்பெற்றனர்.


இவ்வாறாக மென்மேலும் வளர்ந்த யாழ்ப்பாண நூலகம் 1936ல் யாழ். மாநகரசபையின் முதலாவது முதல்வராகப் பணியாற்றிய சாம்சபாபதி, 1953ல் வண.லோங் அடிகளார் போன்றோரை உள்ளடக்கிய கல்விமான்கள், பிரமுகர்களைக்கொண்ட குழுக்களால் காலத்துக்குக் காலம் பாரிய வளர்ச்சி கண்டு, 1959 அக்டோர் 11ஆம் திகதி தற்போதய இடத்தில் நிரந்தர, சர்வதேச தரத்திலான கட்டடத்தொகுதி பெற்று யாழ்ப்பாணத்திற்கே பெருமை சேர பணியாற்றத் தொடங்கியது.

நன்கு திட்டமிடப்பட்ட முறையில் நூலகம் இயங்கி வந்தது. தென்கிழக்காசியாவிலேயே மிகச்சிறந்த நூலகங்களில் ஒன்றாக இது கருதப்பட்டது என்றால், இதற்கு அடித்தளமிட்ட பரோபகாரி கே.எம்.செல்லப்பாவின் ஆரம்ப முயற்சி விதந்து போற்றத்தக்கது.

24.04.1958ல் தன் இறுதி மூச்சைவிடும்வரை யாழ்ப்பாண நூலகத்தின் வளர்ச்சிக்காகவே உழைத்த பெரியார் கே.எம்.செல்லப்பா ஆவார்.

கே.எம்.செல்லப்பா 24.02.1896ல் புத்தூர் மேற்கில் கந்தப்பிள்ளை கனகசபைக்கும் சின்னத்தம்பியார் நாகமுத்துவிற்கும், நான்காவது பிள்ளையாகப் பிறந்தார். புத்தூர் மிஷன் பாடசாலை, அச்சுவேலி மிஷன் பாடசாலை, யாழ் மத்திய கல்லூரி ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்து உயர்ந்து, அரசசேவையில் தன்னை இணைத்துக்கொண்ட இவர் யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, கேகாலை, புத்தளம், நீர்கொழும்பு, பருத்தித்துறை முதலிய நீதிமன்றங்களில் பணியாற்றியவர்.

பெரியகோட்டு சக்கடத்தாராக இருந்து இளைப்பாறியவரே மேற்குறிப்பிடப்பட்ட கனகசபை முத்துத்தம்பியார் செல்லப்பா ஆவார். தனது வாழ்க்கைத் துணைவியாக மயில்வாகனம் மகள் செல்லம்மாவை கரம்பற்றி ஆறு பிள்ளைகளுக்கு தந்தையாகி குடும்பக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றிய இவர் தானத்தில் சிறந்த கல்வித்தானத்தை வழங்க வேண்டி தம் சிந்தனையில் உதித்த நூலகத்திற்கு செயல்வடிவம் கொடுத்த பெரியாராவார்.

தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்ததெல்லாம் புத்தூர் மேற்கில், ஆயினும் அவரது சிந்தனை விரிந்து பரந்து சிறந்ததனால் இன்று நாம் யாழ் நூலகத்தை நிமிர்ந்து பார்த்து வியக்கிறோம்.

இவர் 24.04.1958ல் மரணமடைந்ததை ஒட்டி 25.04.1958ல் யாழ் மாநகரசபையில் மேற்கொள்ளப்பட்ட அஞ்சலித் தீர்மானத்தின்படி அப்போதைய மேயர் பொ.காசிப்பிள்ளை அவர்களால் குடும்பத்தவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் ‘முதன்முதலில் யாழ்ப்பாண மத்திய நூல் நிலையத்தை ஆரம்பித்து நடத்தியவரும் பின் அதனை இம் மாநகரசபையிடம் ஒப்படைத்தவருமான அமரர். கே.எம்.செல்லப்பா அவர்களின் மறைவு குறித்து அனுதாபம் தெரிவிக்கின்றோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரபல கட்டிடக்கலைஞரும் யாழ் மத்திய நூல் நிலையத்துடன் தன்னை நன்கு இணைத்துக் கொண்டவருமான ஏ.துரைராஜா, ஆர்.தயாபரன் ஆகியோர் அவ்வப்போது தாம் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளில் கே.எம்.செல்லப்பா அவர்களின் நூலகப் பணியை போற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள்.

1981 ஜுன் முதலாம் திகதி சில மனிதாபிமானமற்ற விஷமிகளால் யாழ் பொதுசன நூலகம் தீக்கிரையாக்கப்படும்வரை கம்பீரமாக நிமிர்ந்து நின்ற கலைக் கோவிலை கட்டிய சிற்பிகளுள் ஆரம்ப கர்த்தாவாக விளங்குபவரும் புத்தூர் கிராமத்திற்கே பெருமை சேர்த்தவரும் கே.எம்.செல்லப்பா அவர்களேயாவார். இவர் தனது தன்னலமற்ற பணியால் மக்கள் மனங்களில் என்றும் வாழ்வார் என்பது உண்மையாகும்.

-தமிழருவி த.சிவகுமாரன்-

Photo - 2 Photo