வரலாற்றில் அழியா மே 18!!

726


May 18

எஞ்சியது உயிர்தான் அஞ்சி அஞ்சி
அடுத்தடுத்து பலஊர்கள் எங்கள்
குஞ்சுகளை சுமந்து குலங்காக்க
குரல்கொடுத்தோம் எங்கள் குரல்வளை
தங்கி நிற்கும் இறுதி மூச்சுவரை
துஞ்சித்தும் இரக்கமில்லா அரக்கர் தேசங்கள்
நஞ்சூட்டிய எமக்கு ஞானஉபதேசம் செய்கிறது
இன்று அகவை ஏழாச்சு
அன்று இருந்த நிலையிலேயெ
நாமின்றும்..



இழந்த எம்உறவுகளை ஒருகண்
நினைந்து கண்சொரிய கடிதம்
எழுதும் நிலையிலேயே
நாமின்றும்..

மே-18 நாள் உங்கனை மறக்காது
யாருக்கு கதை சொல்லும்
பார் இது ?
பார் இதை
பார்முழுதும் பார்த்திருக்க தானே
ஊர்கூடி ஓலமிட்டோம்
யாருக்கு யார் அனுதாபம் –
நேருக்கு நேர் நின்று நீ குத்து
நேரான அழித்தொழிப்பென்று வரலாறு எழுதுமதை
ஆருக்கும் தெரியாது என்று
கண்ணைமூடி பால்குடித்த பூனைக்
கதை சொல்லு ஆருக்கும் நீ நிமிர்ந்து –



போருக்கு துாபமிட்ட மேற்குலகும் வடக்கும்
வேருக்கு தீமூட்டியபின்
வெறும் பூ பிஞ்சு காய் இலைகளுக்கும்
கிளைகளுக்கும் பசளையிட்டு
பயிர் வளர்ப்பாய் பாசாங்கு
காட்டும் காரியத்தை இனி நிறுத்து
உலகின் எந்த தாயக நிலமும்
சந்திக்காத பேரிழிவை எங்கள்
தாயக நிலம் சந்தித்தது
உந்தன் நாளேட்டில் குறித்து வை மே-18



உனக்கு நிரந்தர கடன் என்பதை
தந்தவனுக்கு திருப்பி கொடுக்காமல் விட்ட
மரபல்ல எங்கள் மரபு
எந்த ரூபத்திலும் எங்கள்
சந்ததியினருக்கு விட்டதையே
செலுத்திக் கொண்டு இருக்கின்றோம்


உலகில் தமிழர்கள் உனக்கென்ன
விளம்பர பொருட்களா? உன்
வியாபார போட்டிக்கு-
சண்டையிடவும் சமாதானம் செய்யவும்
அண்டை நாட்டிற்கு அடிபணிந்து
மண்டியிட்டு சொல்வதை செய்யவும்
மீண்டும் சண்டையிடு சமாதானம்பேசு
கண்டபடி அறிக்கையிடு ஊர்வலம் நடத்து
சொன்னபடி தேர்தலில் நில் என
தொண்டு தொட்டு நீ செய்ததையே செய்கின்றாய்

அன்றுதொட்டு உன் வியாபாரம் அரசியில்
என்றுமே மாறாமல் இருக்க
கண்டணங்கள் செய்கின்றாய்
வெருட்டுகிறாய் மனித நேயம்
மனிதஉரிமை என்றெல்லாம்
ஆருக்கு இந்த அறிக்கையெல்லாம்
போருக்கு பின்னர் நடந்த உண்மைகளை
பட்டியலாய் தந்தபின்னும்
ஊருக்கு ஓர்கதையும் உங்களுக்குள் ஓர்கதையும்
போதுமினி போட்ட நாடகங்கள் இனிதே நடக்கட்டும்.


-கே.கே..எஸ்.அரா-