பேரிச்சம்பழ அல்வா செய்வது எப்படி!!

949

dateshalwa

பேரிச்சம்பழம் உடலுக்கு மிகவும் சிறந்த ஒரு உலர் பழங்களுள் ஒன்று. அத்தகைய பேரிச்சம் பழத்தை பலர் சாப்பிட மறுப்பார்கள். ஏனெனில் அது மிகவும் இனிப்பாக இருப்பதால்.

பலர் சத்தானது என்று தெரிந்தும் அதனை வெறுப்பார்கள். அத்தகையவர்களுக்கு பேரிச்சம் பழத்தை சாப்பிட ஒரு சிறந்த வழி உள்ளது. அது என்னவென்றால் அதனை அல்வா போன்று செய்து சாப்பிடலாம்.

இதனால் அதிகப்படியான இனிப்பு தெரியாமல் இருப்பதோடு, உடலுக்கு பல சத்துக்களும் கிடைக்கும். இப்போது அந்த பேரிச்சம் பழ அல்வா எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பேரிச்சம்பழம் – 2 கப் (விதை இல்லாதது)
சூடான பால் – 2 கப்
சீனி – 1 1/2 கப்
நெய் – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
பாதாம் – 5-6 (நறுக்கியது)

செய்முறை:

முதலில் சூடான பாலில் பேரிச்சம் பழத்தை போட்டு 3 மணிநேரம் ஊற வைத்து நன்கு தடிப்பான பசை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தட்டில், 1 மேசைக்கரண்டி நெய் ஊற்றி தேய்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள பேரிச்சம் பழத்தைப் போட்டு சீனி சேர்த்து, நெருப்பை குறைத்து வைத்து சீனி கரையும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு அத்துடன் இன்னும் சிறிது பால் சேர்த்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் ஏலக்காய் தூள் மற்றும் பாதாம் சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி, அடுப்பில் இருந்து இறக்கி, நெய் பூசிய தட்டில் ஊற்றி, குளிர வைத்து, துண்டுகளாக்கி பரிமாறினால் சுவையான பேரிச்சம் பழ அல்வா ரெடி!!!