வவுனியா மக்கள் காணிகளை இராணுவத்திற்காக எடுப்பதா : சிவசக்தி ஆனந்தன் கண்டனம்!!

434

Sivasakthi

வவுனியாவுக்கு வடக்கே ஓமந்தை சோதனைச்சாவடியைச் சூழ்ந்துள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியை இராணுவத்தின் தேவைக்காக எடுத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்துள்ள இறம்பைக்குளம் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த 16 குடும்பங்களுக்குச் சொந்தமான காணியே இவ்வாறு கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதற்குப் பொறுப்பான அதிகாரியிடமிருந்து காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டிருப்பதாக சிவசக்தி ஆனந்தன் கூறினார்.

இது குறித்து தமக்கு காணி உரிமையாளர்கள் முறையிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் காணிகள் கடந்த 1953 ஆம் ஆண்டு அரசினால் வழங்கப்பட்டதாகவும், அதற்குரிய காணி உறுதிகள் உரிமையாளர்கள் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

யுத்த மோதல்கள் காரணமாக இறம்பைக்குளம் கிராமத்து மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். யுத்தம் முடிவுக்கு வந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி அமைந்திருக்கும் சூழலில் உள்ள தமது காணிகளைத் திருப்பித் தரவேண்டும் என்று பலமுறைகள் கோரிக்கை விடுத்தும் பலன் கிடைக்காத நிலையிலேயே இப்போது, அந்தக் காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்ற வேண்டும், ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் இராணுவ தேவைக்காக பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்துவதைக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-பிபிசி தமிழ்-