வவுனியா கோவில்குஞ்சிக்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

916

 
வவுனியா கோவில்குஞ்சிக்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் உள்ள குறைகளை நவர்த்தி செய்யுமாறு கோரி அப் பாடசாலையின் மாணவர்கள், பெற்றோருடன் கிராமத்தவர்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் இன்று(09.01.2017) ஈடுபட்டனர்.

நிர்வாகத்திறன் அற்ற பாடசாலை அதிபரை மாற்றவேண்டும், போதியளவு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பௌதீக வளங்கள் பாடசாலைக்கு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பாடசாலை வாயிலை மறித்து இன்று காலை இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பாடசாலையில் 56 மாணவாகள் கற்று வந்த நிலையில் அம் மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகள் இடம்  பெறாமையினால் பெற்றோர் வேறு பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை மாற்றி வருவதாகவும் இதன் காரணமாக பாடசாலை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்கரர்கள் தற்போது 33 மாணவர்களே குறித்த பாடசாலையில் கற்று வருவதாகவும் தெரிவித்தனர்

இந் நிலையில் இப்பாடசாலையில் இருந்த ஆசிரியர்களில் நான்குபேர் மகப்பேற்று விடுமுறையிலும் மற்றைய ஆசிரியர் இடமாற்றம் பெற்றும் சென்றுள்ள நிலையில் அதிபரும் ஒரு ஆசிரியருமே 9ம் ஆண்டுவரை உள்ள இப்பாடசாலையில் கற்பித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

எனவே தமது பாடசாலையில் கற்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை கருத்தில் கொண்டு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்வேண்டும் எனவும் இம் முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு சிறந்த ஆசிரியரை நியமிக்குமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இப் பாடசாலையில் வட மாகாண சுகாதார அமைச்சரின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதி பயன்படுத்தப்படாமல் பாழடைந்து வருவதாகவும் தெரிவித்த பெற்றோர் இதற்கு ஆதிபரின் நிர்வாகத்திறன் அற்ற செயற்பாடே காரணம் எனவும் தெரிவித்தனர்.

இந் நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் உதவி வலய கல்விப்பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்ததுடன் இம் மாத இறுதிக்குள் அதிபரை மாற்றம் செய்வதுடன் மகப்பேற்று விடுமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான பதிலீட்டு ஆசிரியர்களை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நியமிக்க ஆவண செய்வதாகவும் உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் 11 மணியளவில் கைவிடப்பட்டிருந்தது.