பன்னீர் செல்வத்தால் ஆபத்து : சிறையிலிருந்து தூது அனுப்பிய சசிகலா!!

263

தமிழக முதலமைச்சராக கடந்த 16ம் திகதி எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார். நேற்று முன்தினம் தன்னுடைய பெரும்பான்மைய சட்டசபையில் 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிரூபித்து ஆட்சியை தக்க வைத்திருக்கிறார்.

எனினும், இது குறித்து பல்வேறு சர்ச்சைகளும், முறைப்பாடுகளும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு கோரி, எதிர்க்கட்சிகள் இல்லாத ஒரு வாக்கெடுப்பை சபாநாயகர் தனபால் நடத்தியிருக்கிறார். இதுகுறித்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள்.

ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நடந்த முறைகேடுகள் குறித்து புகார் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரைச் சந்தித்து தன்னுடைய முறைப்பாட்டையும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், எடப்பாடிப் பழனிசாமியின் ஆட்சியை எவ்வாறு கலைப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்கியுள்ள சட்ட ஆலோசகர்கள், தி.மு.க எம்.எல்.ஏக்களும் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்யலாம்.

ஏறத்தாழ சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். அப்படிச் செய்தால் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த உத்தரவிடும் இக்கட்டான சூழ்நிலையை ஆளுநருக்கு உருவாக்கலாம் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்து தன்னுடைய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களோடு மந்திராலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது பெரும்பான்மையை தற்காலிகமாக எடப்பாடி பழனிசாமி நிரூபித்தாலும் அவரின் ஆட்சி நீடித்து நிலைக்காது என்கிற கருத்தும் வலுப்பெற்றுவருகிறது.

ஏனெனில், எதிர்க் கட்சிகள் இல்லாத வாக்கெடுப்பில் மட்டுமே அவர் தனது பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறார். அதுமட்டுமன்றி சட்டசபையில் எதிர்க் கட்சியினர் தாக்கப்பட்டு, சட்டைகள் கிழிக்கப்பட்டு நடந்தேறிய களேபரங்கள் ஒரு ஜனநாயகப் படுகொலைகள் என தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

இதற்கிடையில் சட்டசபையில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பு குறித்து எதிர்க் கட்சியினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் பட்சத்தில் இந்த வாக்கெடுப்பை நிராகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என சட்ட வல்லுநர்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதுவொருபுறமிருக்க, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பெற்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக மக்களின் ஆதரவு இருக்குமா என்பது சந்தேகமே.

சட்டமன்ற உறுப்பினர்களை பெரும்பாலான மக்கள் எதிர்ப்பதை ஆங்காங்கே காணக்கூடியதாக இருக்கிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பன்னீர்செல்வம் அகிய இருக தரப்பும் மேற்கொள்ளும் அடுத்த கட்ட விவேகமான நகர்வுகளால் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் நாற்காலிக்கு ஆபத்திருப்பதாக அரசியல் ஆலோசகர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

இவற்றுக்கிடையில், தமிழக அரசியல் குறித்து கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடுக்கப் போகும் முடிவு என்ன என்பது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் மட்டுல்லாது தமிழக மக்களும் பரபரப்போடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள அதிமுகவின் தற்காலிய பொதுச் செயலாளர் வி.கே சசிகலா தனது கண்ணசைவிலேயே தமிழக ஆட்சி நடைபெறவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

சிறைக்குச் சென்றாலும் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பதைப்போல தமிழக முதல்வர் பழனிசாமி தன்னுடைய ஒவ்வொரு நகர்வுகளையும் சசிகலாவின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பது சசிகலாவின் உத்தரவு.

வாரத்திற்கு ஒருமுறை தன்னை சந்திக்க வேண்டும் என்றும், தினகரன், நடராஜன், மற்றும் தன்னுடைய ஆலோசனை இன்றி எந்த முடிவையும் எடப்பாடி பழனிசாமி எடுக்கக் கூடாது.

மேலும், வாக்கெடுப்பில் தோற்றுப் போன பன்னீர்செல்வம் குறுக்கு வழியில் காய்நகர்த்தி தற்போது அமைந்துள்ள ஆட்சியைக் கலைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்பதால் சசிகலா மிகவும் அவதானத்தோடு தன்னுடைய நகர்வுகளை மேற்கொண்டுவருகிறார்.