தன் மீதான பாலியல் வல்லுறவு : 25 ஆண்டுகளாக போராடும் கதாநாயகி!!

249

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பன்வாரி தேவி, கல்வியறிவு இல்லாதவராகவும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து சுமார் 25 ஆண்டுகளாக போராடி வருகிறார்.

உயர் சாதியை சேர்ந்த அண்டை வீட்டாரால் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இவர், நீதிக்கான சட்டப்போராட்டதைக் கைவிடத் தயாராக இல்லை.

இவரது வழக்கு, பணியிடத்தில் பாலியல் கொடுமைகள் நடைபெறுவதை தடுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் உருவாக்க அடிப்படையாக இருந்தது. ஆனால், அவரை வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை, விசாரணை நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

ஆனால், உயர் நீதிமன்றத்தில் பன்வாரி தேவி செய்த மேல்முறையீடு, 22 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரண்டு பேர் இறந்து போய்விட்டனர்.

தற்போது 56 வயதாகும் பன்வாரி தேவி, 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 -ஆம் நாளன்று தனக்கு நிகழ்ந்த கொடுமையான நிகழ்வின் தேதியை நினைவுபடுத்த முடியாவிட்டாலும், அந்தத் தாக்குதலும், அதன் ரணமும் அவர் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

ஜெய்ப்பூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பட்டேரி கிராமத்தில், சம்பவ தினத்தன்று அந்தி சாயும் பொழுதில் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த பன்வாரி தேவியின் கணவரை ஐந்து பேர் தடிகளால் தாக்கத் தொடங்கினார்கள்.

கணவருக்கு உதவி செய்ய அங்கு ஓடிச்சென்று அவர்களிடம் கெஞ்சிய பன்வாரி தேவியை மூன்று பேர் பலாத்காரம் செய்ய, மீதமிருந்த இரண்டு பேர், கணவரை சுற்றிவளைத்துக் கொண்டனர்.

செல்வாக்குமிக்க இனமாகக் கருதப்படும் குஜ்ஜர் இனத்தை சேர்ந்த தாக்குதல்தாரிகள், கிராமத்தில் வசதியானவர்கள். பன்வாரி தேவியும், அவரது கணவர் மோகன்லால் பிரஜாபதியும் தாழ்த்தப்பட்ட சாதியினராக கருதப்படும் குயவர் இனத்தை சேர்ந்தவர்கள்.

சில மாதங்களுக்கு முன்னதாக, குஜ்ஜர் இனத்தை சேர்ந்த ஒன்பது மாத பெண் குழந்தைக்கு நடைபெறவிருந்த திருமணத்தை பன்வாரி தேவி தடுத்ததுதான் அவர்களின் கோபத்திற்கான அடிப்படை காரணம்.

பன்வாரி தேவி, 1985 ஆம் ஆண்டு முதல், மாநில அரசின் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தில் இணைந்து பணிபுரிந்துவந்தார்.

கிராமங்களில் வீடு-வீடாகச் சென்று, சமூக அநீதிகளுக்கு எதிராகவும், சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு, பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, பெண் சிசுக் கொலை, கருவிலேயே பெண் சிசுக்களை அழிப்பது, வரதட்சணை மற்றும் சிறார் திருமணம் போன்ற சமூக பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தி வந்தார்.

சிறு வயதிலேயே திருமணம் செய்வது ராஜஸ்தான் மாநிலத்தில் பாரம்பரியமான வழக்கம். பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளுக்கும் திருமணம் செய்வது அங்கு இயல்பான ஒன்று.

பன்வாரி தேவிக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும் போது, எட்டு வயது சிறுவருடன் திருமணம் நடந்தது.

இந்த பழக்கத்தை மாற்றுவதோ, எதிராகவோ போராடுவதோ பன்வாரி தேவியின் இலட்சியம் அல்ல, அவர் தனது கடமையைத் தான் செய்தார். குஜ்ஜர்களின் விவகாரத்தில் தலையிடுவது, பிரச்சனையை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம் என்று அவருக்கு தெரியும்.

ஆனால் அந்த சமயத்தில் பன்வாரி தேவியால் வேறு எதுவும் செய்யமுடியவில்லை. குழந்தை திருமணத்தை தடுக்க காவல்துறையிடம் கோரிக்கை வைத்தபோது, அவர்கள் திருமணத்திற்கு வந்து, விருந்து சாப்பிட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.

பன்வாரி தேவி தங்களை அவமானப்படுத்திவிட்டதாக குஜ்ஜர்கள் குற்றம் சாட்டிய நிலையில், அடுத்த நாள் நடைபெறவிருந்த திருமணத்தை நிறுத்திவிட்டதால் அவர்களின் கோபம் உச்சத்தை அடைந்தது.

கலாசாரத்தை போற்றும் இந்தியாவில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்கள், அதை அவமானமாக நினைத்து வெளியில் சொல்லாமல் மறைத்துவிடும் சூழ்நிலை இன்றும் நிலவும்போது, 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இன்னமும் மோசமாகவே இருந்தது. ஆனால் பன்வாரி தேவியின் போராட்டத்திற்கு எதுவும் தடையாக இருக்கவில்லை என்று அவருடன் இணைந்து பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் பணியாற்றிய டாக்டர் ப்ரீதம் பால் கூறுகிறார்.

தனக்கு நடந்த கொடுமை பற்றி புகார் கொடுக்க பொதுமக்களுடன் சென்ற பன்வாரி தேவி, பொய் சொல்வதாக குற்றம் சாட்டப்பட்டார், இரு தரப்பினரிடையே சண்டை மூண்டதாகவும், பாலியல் பலாத்காரம் ஏதும் நடைபெறவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மறுத்தனர். புகாரை நிராகரிக்கும் மனநிலையிலேயே செயல்பட்ட காவல்துறை, புகாரை விசாரிப்பதில் மெத்தனப்போக்கை கடைபிடித்தது.

பலாத்காரம் நடைபெற்றதா என்பதை உறுதி செய்யும் பரிசோதனையானது பலாத்காரம் நடந்த 24 மணி நேரத்திற்குள் நடத்தப்படவேண்டும், ஆனால் பன்வாரி தேவிக்கு 52 மணி நேரத்திற்கு பிறகே பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கு ஏற்பட்ட காயங்களும், சிராய்ப்புகளும், உடல்ரீதியான தாக்குதல் குறித்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

உள்ளூர் நாளிதழ்களில் பன்வாரி தேவிக்கு நடந்த கொடுமை குறித்து வெளியான செய்திகளும், மகளிர் அமைப்புகளின் போராட்டங்களுமே சி.பி.ஐ விசாரணைக்கு வழக்கை மாற்றியது.

சம்பவம் நடந்த ஓராண்டிற்கு பிறகுதான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளில் ஒருவரான ராம்கரணின் மகளின் திருமணத்தை நிறுத்தியதால் பன்வாரி தேவி பழிவாங்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிமதி என்.எம் டைப்ரிவால், 1993 ஆம் ஆண்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.

ஆனால் அதற்கு பிறகு பன்வாரி தேவிக்கு எதிராகவே அனைத்தும் நடந்தன. விசாரணையின் போது ஐந்து முறை நீதிபதிகள் மாற்றபட்டனர். 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெறும் ஒன்பது மாத சிறை தண்டனையுடன் தப்பித்துவிட்டார்கள்.

கூட்டு பாலியல் வன்கொடுமை என்று நீதிமன்றம் தெளிவாக கூறிய நிலையில், பன்வாரி தேவிக்கு நீதி மறுக்கப்பட்டது, மாநில அரசும் பன