வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் : நாட்டில் சூறாவளி ஏற்படும் அபாயம்!!

340

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கத்தினால் இலங்கையில் சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.ஜயசேகர தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் வடக்கு திசை நோக்கி நகர்ந்தால் மணிக்கு 80கி.மீ. வேகத்தில் காற்று வீசி சூறாவளியை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாக அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்படி தகவல் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியிலுள்ள தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறி வடக்கு திசையை நோக்கி நகர்ந்து வங்காள தேசம் வரை பயணிக்கும் என்று வானிலை அவதான நிலைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதன் காரணமாக இலங்கையில் சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம் போன்ற பகுதிகளில் காற்றின் வேகம் மிகவும் அதிகரித்துக் காணப்படும் என்றும் குறிப்பாக காலி, மாத்தறை உள்ளிட்ட கடற்பகுதியை அண்டிய பிரதேசங்களில் காற்று பலமாக வீசக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த நாட்களைப் போன்று நிலைமை பாரதூரமானதாக இல்லாவிடினும் காற்றின் வேகம் அதிகரிப்பதைப் பொறுத்தே நிலைமை மாற்றமடையும் என்றும், மக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வங்கக் கூடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி, கடலூர் ஆகிய துறைமுகங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் கொல்கத்தாவுக்கு 950 கி.மீ. தெற்கே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, வங்கதேசம் அருகே நாளை செவ்வாய்க்கிழமை (மே 30) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதிக வேகத்தில் காற்று வீசலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.