எனக்கு கட்சி முக்கியமில்லை : சீ.வி.விக்னேஸ்வரன்!!

469

சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக 22 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ள நிலையில், அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வெளுத்ததெல்லாம் பால் என்ற எண்ணம் என்னிடம் இருப்பதால் எல்லோரையும் நம்பியிருந்தேன். இந்த எண்ணத்தில் தொடர்ந்தும் இருக்கிறேன்.

வடமாகாண சபையின் நடவடிக்கைகள் நிர்வாக ரீதியானதாக காணப்படுகின்றது. அதனால் அரசியில் கட்சிகளுடன் கூடிய தொடர்புகளை நான் பேணுவதில்லை. சிந்தனையில் நாம் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள்.

இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பது நியாயமானது. ஆனால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத ஏனைய இரு அமைச்சர்களுக்கு எதிராக எவ்வாறு நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என இரா.சம்பந்தன் என்னிடம் வினவினார்.

ஏனைய இரு அமைச்சர்களுக்கு எதிராக சாட்சியங்களை முன்வைக்க சாட்சியாளர் விரும்புவதாகவும் அதேபோல் அவர்களுக்கு எதிராக மேலும் பல புதிய எழுத்து மூலமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நான் சம்பந்தனிடம் கூறினேன்.

எனவே அந்த இருவரும் தொடர்ந்தும் அமைச்சு பதிவிகளில் இருக்கலாம் எனவும் ஆனால் அவர்கள் அமைச்சின் அலுவலகங்களுக்கு செல்ல கூடாது எனவும் சம்பந்தனிடம் எடுத்து கூறியிருக்கிறேன்.

ஆனால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தவறு என்று எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார். இருப்பினும் அதில் தவறில்லை. அது சரியானது தான் என்று நான் அவருக்கு தெரிவித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் தலைமையுடன் அதாவது இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோருடன் எனக்கு எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.