எதிர்வரும் நாட்களில் கடும் மழையும் காற்றின் வேகமும் அதிகரிக்கும்!!

640

எதிர்வரும் நாட்களில் நாட்டில் கடும் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

மேல் மாகாணம், தென் மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களில் கடுமையான மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கலாம் என்று வானிலை அவதான நிலையத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

அதேநேரம் வடக்கு மற்றும் வடகீழ், வடமேல் பிரதேசங்கள் மற்றும் கடற்பகுதியில் வேகமான காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்காரணமாக கடற்பிராந்தியத்தில் ஆக்ரோசமான அலைகளுடன் கொந்தளிப்பான நிலையும் ஏற்படலாம் என்பதால் அவதானமாக நடந்து கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதே ​நேரம் இரத்தினபுரி மாவட்டத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாகவும், அப்பிரதேசத்தில் 90 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.