வவுனியா தாருல் ஈமான் குர்ஆன் மதரஸாவின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வு!!

1098

 
வவுனியா வாழவைத்தகுளம் தாருல் ஈமான் குர் ஆன் மதரஸாவின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வு நேற்று ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலய கேட்போர்கூட மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மாணவர்களது திறமைகளை வெளிக்கொணரும் வகையில் மதாஸாவில் கற்றுக்கொண்ட குர் ஆன் மனனம், ஹதீஸ்கள், இஸ்லாமிய கலைச்சொற்கள் மனனம் என்பவற்றுடன் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளிலான நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் மதரஸாவினால் வைக்கப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் பணப்பரிசில்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் குறித்த குர் ஆன் மதரஸாவை தனியொருவராக நடாத்தி மாணவர்களுக்கு மார்க்க கல்வியுடன்
பாடசாலை கல்வியையும் வழங்கும் மதரஸாவின் தலைவரும் செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருமான மௌலவி டி.எஸ். சாஜித் (காசிமி)க்கு பெற்றோர்களால் கௌரவம் வழங்கப்பட்டது.

குர் ஆன் மதரஸாவின் தலைவர் டி.எஸ். சாஜித் (காசிமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட முஸ்லிம் விவாகப்பதிவாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான டி.எம். சாஜிதீன் கலந்துகொண்டதுடன் கௌரவ விருந்தினராக கிராமத்தின் முதலாவது சட்டத்தரணி நூர்தீன் சர்ஜூன் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக வாழவைத்தகுளம் மஸ்ஜிதுத் தௌஹீத் ஜும்மா பள்ளியின் தலைவர் உட்பட கிராமத்தின் ஆசிரிய ஆசிரியைகள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.