வவுனியா “குண்டு தோசை” முதலிடம்: தேசிய மட்டத்திற்கு தெரிவு!!

1034

உலக உணவு தினத்தினை முன்னிட்டு உள்நாட்டு உயிர்ப்பல்வகைமையின் ஊடாக போசணை மிக்க உணவுகள் எனும் தலைப்பின்கீழ் தேசிய உணவு கொண்டாட்டம் நேற்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.

கண்னொருவையில் அமைந்துள்ள தாவர கரு மூல வள நிலையத்தில் மத்திய விவசாய அமைச்சு ஊடாக குறித்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது உள்நாட்டு உணவு உற்பத்தியில் ஈடுபடும் உணவு உற்பத்தியாளர்களிடையே இரண்டு வகையாக மாவட்ட மட்ட போட்டிகள் நடைபெற்று இரண்டு போட்டியாளர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

வேர்க்கிழங்கு பயிர்கள் மற்றும் தானியப்பயிர்களிலான பெறுமதி சேர் உணவு தயாரிப்பில் கூமாங்குளம், அம்பாள் விவசாய பெண்கள் அமைப்பினைச் சேர்ந்த இராசலிங்கம் கலாநிதி என்பவர் குண்டு தோசை தயாரிப்பில் தேசிய மட்டத்திற்கு தேர்வாகியுள்ளார்.

பழங்கள், மரக்கறிகள் மற்றும் இலைமரக்கறிப் பயிர்களிலான பெறுமதி சேர் உணவு தயாரிப்பில் கூமாங்குளம், அம்பாள் விவசாய பெண்கள் அமைப்பினைச் சேர்ந்த சந்திரசேகரம் செந்தில்மணி என்பவர் வெள்ளரிப்பழத்தில் இருந்து தரமான பழக்கலவை பானம் தயாரிப்பில் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டத்திற்கு தேர்வாகியுள்ளார்.

குறித்த போட்டியாளர்களை வழிநடத்தி சென்ற வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்கள மகளிர் விரிவாக்க உத்தியோகத்தர் அல்ஜின் குருஸிற்கும், போட்டியாளர்களுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.