வட்டிக்குக் கடன் கொடுத்து காசோலை மோசடியில் ஈடுபட்டவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை!!

659

வட்டிக்குக் கடன் கொடுத்து காசோலை மோசடியில் ஈடுபட்ட ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள அரச வங்கியொன்றில் பணியாற்றும் அதிகாரியொருவருக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 47,85,000 ரூபா காசோலை பணத்தை திரும்பி செலுத்த தேவையில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இத்தகைய சட்ட முரணான செயற்பாடுகளில் ஈடுபட்டால், நீதிமன்றத்தினூடாக அந்த பணத்தை மீளப்பெற முடியாது எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீட்டர் வட்டி , பிரமிட் வட்டி என்பன சட்டத்திற்கு முரணான செயற்பாடு என தெரிவித்துள்ள நீதிபதி, கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் இருவரும் குற்றவாளிகளாவர் என அறிவித்துள்ளார்.

இத்தகைய மீட்டர் வட்டி யாழ்ப்பாணத்தில் ஒரு குடும்பத்தையே காவு கொண்டுள்ளதை நினைவுபடுத்திய நீதிபதி, இத்தகைய செயற்பாடுகளால் ஒன்றுமே அறியாத பச்சிளம் குழந்தைகள் இறந்துபோயுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, மணித்தியால வட்டி, நாள் வட்டி, மாத வட்டி, மீட்டர் வட்டி மற்றும் பிரமிட் வட்டி என்பன யாழ்ப்பாணத்தில் நடைமுறையில் உள்ளதாகவும் இவற்றை அனைவரும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான நிதி நிறுவனங்களைக் கண்காணித்து, இவை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கூறியுள்ளார்.

ஒரு அரச வங்கி உத்தியோகத்தருக்கு கோடிக்கணக்கில் எவ்வாறு பணம் கிடைத்தது என்பது தொடர்பில் வங்கியின் முகாமையாளர் ஆராய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.