வவுனியா நகரப் பூங்காவில் நுளம்புப் பெருக்கம் அதிகரிப்பு!!

343

 
வவுனியா நகரசபை பொதுப் பூங்காவில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளதையடுத்து சிறுவர்களை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் தயங்குவதுடன், செல்கின்றவர்களும் மாலை 5 மணியளவில் அங்கிருந்து சென்றுவிடுகின்றனர்.

வவுனியா நகரசபையின் பொதுப் பூங்காவினை அண்மித்த பகுதியில் நுளம்பு பெருக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. குறித்த பூங்காவினை கேள்விக் கோரல் மூலம் பெற்றுக் கொண்டவர்கள் நுளம்பு பெருக்கெடுப்பதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை எனவும் இதன் காரணமாகவே அந்தப் பகுதியில் நுளம்பு பெருக்கெடுக்கின்றது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மாலை 6 மணியளவில் பூங்காவினைப் பூட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. மாலை நேரங்களில் சிறுவர்கள், பெற்றோர்கள் அங்கு செல்வதுண்டு. தற்போது செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுளம்பைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர், நகரசபைப் பரிசோதகர்கள் அக்கறையற்ற நிலையில் இருப்பதாகவும் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக பெய்துவரும் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக நுளம்பு பெருக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக மாலை நேரங்களிலும் காலை வேளைகளிலும் நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. டெங்குத் தாக்கம் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.​