வவுனியா இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : வெறிச்சோடி காணப்படும் பேரூந்து நிலையம்!!

372

 
இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய முகாமையாளரையும் வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி இன்று (18.11.2017) காலை முதல் தொடர்ச்சியாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வட பிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் இராசரத்தினம் வாமதேவன் கருத்து தெரிவிக்கையில், வவுனியா சாலையின் நடவடிக்கைகளை நாங்கள் இன்று முடக்கி வைப்பதற்குறிய காரணம் எங்களுடைய வட பிராந்திய முகாமையாளர் ஒருதலைப்பட்சமாக ஒரு குறிப்பிட்ட நபர்களின் கதைகளை கேட்டுக்கொண்டு செயற்படுவதுடன் பழிவாங்கும் செயற்பாட்டில் நடந்து கொள்கின்றார்.

வட மாகாணத்தில் தகுதியான பல உத்தியோகத்தர்கள் இருக்கின்ற போதும் தகுதியற்றவர்களுக்கு நியமனம் வழங்கப்படுவதுடன் அவரது கட்சி சார்பானவர்களுக்கே முன்னுரிமை வழங்குகின்றார்.

எங்களது சாலையில் எரிபொருளை நிரப்பி விரயம் செய்வது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும் வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி இன்று தொடக்கம் தொடர் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.

இ.போ.ச வடக்கு பிராந்திய முகாமையாளரை உடனடியாக மாற்று , சிலரின் சொல்லைக் கேட்டு வவுனியா சாலையை வதைக்காதே, வட பிராந்திய முகாமையாளர் தனது வாகனத்திற்கு வவுனியா சாலையில் மாத்திரம் ஒரு மாதத்திற்குள் 211 லீற்றர்க்கு அதிகமான எரிபொருளை விரயம் செய்துள்ளார், உனது சொந்தத் தேவைக்கான வவுனியா சாலையின் எரிபொருளையும் சொத்துக்களையும் வீணடிக்காதே, உன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக மற்றவர்களை பழிவாங்காதே, வட பிராந்திய பாதுகாப்பு உத்தியோகத்தரின் தலமைக்காரியாலய பதவிமாற்றக்க கட்டளையை நடைமுறைப்படுத்தாதது ஏன் என பல்வேறு வாசகங்களை தாங்கிய பாதைகள் இ.போ.ச வவுனியா சாலைக்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.