வவுனியா பள்ளிவாசலுக்கு அருகில் வர்த்தக நிலையம் தீக்கிரையால் பதற்றநிலை : பொலிசார் தீவிர விசாரணை!!

393

 
வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த இரு கடைகள் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில் வவுனியா நகரில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொலிசார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இன்று அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பள்ளிவாசல் பகுதியில் 14 கடைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக இரு கடைகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதிளவு சேதமடைந்துள்ளது.

குறித்த வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், விசமிகளின் செயற்பாடே காரணம் எனவும் தெரிவித்து காலை அப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்று கூடினர். இதனால் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதேவேளை, தீ விபத்து குறித்து பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் அவர்களது விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவ்வாறு நடைபெறாத நிலையில் எதிர்வரும் புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அப்பகுதி வர்த்தகர்களும், பள்ளிவாசல் நிர்வாகமும் தெரிவித்துள்ளனர்.

பதற்றநிலை நிலவிய இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், அயூப் அஸ்மின், வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் சென்று நிலமைகளை அவதானித்து இருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசேட குழு அமைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.