குரங்குகளால் மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை!!

651

 
ஓட்டமாவடி – கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், குரங்குகளின் விளையாட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவத்தமுனை, மீராவோடை போன்ற கிராமங்களில் இக்குரங்குகளின் தொல்லை நாட்களுக்கு நாள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குரங்குகள் கூட்டம் கூட்டமாக நுழைத்து பொது மக்களின் வீடு, தோட்டங்கள் மற்றும் சொத்துக்களுக்கும் பாரிய சேதத்தினை ஏற்படுத்தி வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால், அங்குள்ள பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கும் பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குரங்குகள் தமக்குள் சண்டையிட்டு கொண்டு மரங்களிலும், பாடசாலை கூரைகளிலும் பாய்ந்து விளையாடியதன் காரணமாக முன்பு மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலத்தில் பாடசாலையின் ஓடுகள் மாணவர்களின் மேல் விழுந்துள்ளன.

இதனால் இரண்டு மாணவர்கள் பலத்த காயங்களுடனும் ஏனைய நான்கு மாணவர்கள் சாதாரண உட்காயங்களுடனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வந்துள்ளனர்.

குரங்குகளினால் ஏற்படும் தொல்லைகள் குறிந்து பிரதேசசெயலக அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் பல தடவைகள் வலியுறுத்தப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இருப்பினும் இந்நிலமையினை கட்டுபாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகளை ஓட்டமாவடி பிரதேச செயலகமும், பிரதேச சபையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.